என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட்- ரபாடா 5 விக்கெட்டு வீழ்த்தினார்
    X

    ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட்- ரபாடா 5 விக்கெட்டு வீழ்த்தினார்

    போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ரபாடா 5 விக்கெட் வீழ்த்தினார். #SAvAUS
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் வார்னர், பான்கிராப்ட் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடினார்கள்.

    வார்னர் அரைசதத்தால் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 26.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் சேர்த்தது. பான்கிராப்ட் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வார்னர் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் வார்னர், கவாஜா ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினார்கள். கவாஜா 4 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். வார்னர் 63 ரன்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.



    4-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குபிடித்து விளையாடியது. தேனீர் இடைவேளைக்கு சற்று முன் ஸ்மித் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ரபாடா வீசிய 52-வது ஓவரின் கடைசி பந்தில் எல்.டபிள்யூ. ஆனார். 54-வது ஓவரை ராபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷேன் மார்ஷ் அடுத்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 4-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐந்தாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அத்துடன் தேனீர் இடைவேளை விடப்பட்டது.

    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தொடங்கினார். டபாடா 54-வது ஓவரின் கடைசி பந்தை வீசினார். இதில் கம்மின்ஸ் ஆட்டமிழந்தார். இதனால் ரபாடா 7 பந்தில் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்தார். ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களுக்கு எடுத்திருந்த ஆஸ்திரேலியா 170 ரன்னுக்குள் 7 விக்கெட்டை இழந்தது.

    8-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க்கை 8 ரன்னில் வீழ்த்தி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார் ரபாடா. 9-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். நாதன் லயனை வைத்துக் கொண்டு பெய்ன் ரன்கள் அடிக்க சேர்க்க ஆரம்பித்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 200 ரன்னைத் தாண்டியது.



    ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 212 ரன்னாக இருக்கும்போது லயன் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 10-வது விக்கெட்டுக்கு பெய்ன் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்தது. பெய்ன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 243 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஹசில்வுட் 10 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 21 ஓவர்களில் 96 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். நிகிடி 13.3 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
    Next Story
    ×