என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது ஒருநாள் போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா
    X

    3-வது ஒருநாள் போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

    தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #INDvsSA #ThirdODI
    கேப் டவுன்:

    தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.



    இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கேப் டவுன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர்.

    தவான் 76 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தவான் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 140 ரன்கள் சேர்த்தது. அதன்பின் களமிறங்கிய ரகானே 11 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதைத்தொடர்ந்து கோலியுடன், டோனி இணைந்தார். சிறப்பாக விளையாடிய கோலி 119 பந்துகளில் சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரின் 34-வது சதமாகும். மேலும் இந்திய கேப்டன்களாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் 12 சதங்களுடன் கோலி முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    டோனி 10 ரன்களிலும், அவரை தொடர்ந்து கேதார் ஜாதவ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்தது. கோலி 160 ரன்கள் (159 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்ஸர்), புவனேஷ்வர் குமார் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

    தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் டுமினி 2 விக்கெட்களும், மோரிஸ், தாகிர், ரபாடா, பெஹலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் தென்ஆப்ரிக்கா அணியின் வெற்றிக்கு 304 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.

    இந்நிலையில், தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆம்லாவும, கேப்டன் மார்க்ராமும் களமிறங்கினர். முதலிலேயே அந்த அணியின் ஆம்லாவை அவுட்டாக்கி அதிர்ச்சி அளித்தார் பும்ரா. இதனால் ஒரு ரன்னில் ஆம்லா வெளியேறினார்.



    அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினி மார்க்ராமுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். அணியின் எண்ணிக்கை 79 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி மார்க்ரம் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த டுமினி அரை சதமடித்தார்.

    அவரை தொடர்ந்து யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. மேலும், குல்தீப் யாதவும் சஹாலும் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்ரிக்கா வீரர்களை விரைவில் அவுட்டாக்கினர். இதையடுத்து, தென் ஆப்ரிக்கா அணி 40 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் தலா 4 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
    இந்த வெற்றியுடன் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #INDvsSA #ThirdODI
    Next Story
    ×