search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக ஆட்சியில் நீடிக்க 9 தொகுதியில் வெற்றி பெற வேண்டும்
    X

    அதிமுக ஆட்சியில் நீடிக்க 9 தொகுதியில் வெற்றி பெற வேண்டும்

    அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    அ.தி.மு.க. 134 தொகுதிகளை கைப்பற்றியது. தி.மு.க. 89 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தப்பட்டது.

    தேர்தல் முடிந்ததும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சீனிவேல் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 133 ஆக குறைந்தது. பின்னர் நடந்த இடைத்தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 136ஆக அதிகரித்தது.

    இந்த நிலையில் முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். இதனால் அ.தி.மு.க. பலம் 135 ஆக குறைந்தது. ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் 11 பேர் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஆதரவு கொடுத்தனர்.

    இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிரானார்கள். இதையடுத்து, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சமீபத்தில் திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் மரணம் அடைந்தார். குற்ற வழக்கில் தண்டனை பெற்ற ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பால கிருஷ்ணரெட்டி பதவியை இழந்தார். அதனால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 115 ஆக குறைந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக திருவாரூர் தொகுதி காலியானது. இதனால் தி.மு.க. பலம் 88 ஆனது.

    பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உள்பட 21 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில், 3 தொகுதிகளுக்கு வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 18 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேறு கட்சிகளை சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் தினகரன் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

    இதனால் அ.தி.மு.க.வுக்கு 110 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரவு இருந்தது. இதனால் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. குறைந்தது 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றால்தான் ஆட்சியை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவானது.

    இந்த நிலையில், சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் நேற்று திடீர் என்று மரணம் அடைந்தார். எனவே, அ.தி.மு.க. ஆட்சி நீடிக்க இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. #ADMK
    Next Story
    ×