search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர்
    X

    உஜ்ஜயினி மகாளியம்மன் கோவில் - தஞ்சாவூர்

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களுள் ஒன்று, தஞ்சாவூர் உஜ்ஜயினி மகாளியம்மன் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களுள் ஒன்று, தஞ்சாவூர் உஜ்ஜயினி மகாளியம்மன் ஆலயம். வெளியூரில் இருந்து ஒரு குடும்பத்தார் வண்டி கட்டிக்கொண்டு, வணிகம் செய்வதற்காக தஞ்சாவூர் வந்துள்ளனர். அவர்களுடன் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியும், அவளது அண்ணனும் இருந்தனர். தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அந்த குடும்பத்தார் தங்கினர். அனைவரும் வெளியில் சென்ற நிலையில், சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள்.

    சிறிது நேரத்திற்குப்பிறகு வெளியே சென்ற அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. வெளியில் இருந்து அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அனைவரும் கதவை உடைத்தனர். அப்போது உள்ளே சிறுமி ஒரு சிலையாக காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அங்கு ஆலயம் அமைத்து வழிபடத் தொடங்கினர். இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவளாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவளாகவும் இருக்கிறாள். விழாக்களின்போது அதிக எண்ணிக்கையில் முளைப்பாரி எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், பால் குடம் தூக்குதல், பொங்கல் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகிறார்கள்.

    ஆலயத்தின் நுழைவு வாசலில் நுழைந்ததும், உள்ளே மூலவர் கருவறைக்கு முன்பாக பலிபீடம், கொடி மரம், சிங்கம், சூலம் ஆகியவை உள்ளன. கோவிலைச் சுற்றி வரும்போது ஏனாதிநாத நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோரைக் கண்டு தரிசிக்கலாம். திருச்சுற்றில் உள்ள வேப்ப மரத்தின் அருகே நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடுத்தபடியாக நவக்கிரகங்களும் காட்சிதருகின்றன.

    மூலவர் சன்னிதியில் அம்மன் அமர்ந்த கோலத்தில், சாந்த சொரூபியாக கிழக்கு பார்த்த நிலையில் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதியின் இருபுறமும் செல்வ விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் அமைந்துள்ளனர். பக்தர்களின் பிரார்த்தனைகளைத் தீர்த்துவைத்து வாழ்வில் நம்பிக்கை ஒளியேற்றி வைக்கிறாள், உஜ்ஜயினி மாகாளியம்மன். தஞ்சாவூரில் இக்கோவில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது. 
    Next Story
    ×