search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனம் வருந்துதலும், திரும்புதலும்
    X

    மனம் வருந்துதலும், திரும்புதலும்

    மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.
    தவக்காலம் என்பது வசந்தகாலம் போன்றது. பழைய வாழ்வின் இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய வாழ்வின் துளிர்கள் வரவேண்டும் என்பதற்காகவே தவக்காலம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மாற்றம் உருவாகவேண்டும் எனும் சிந்தனை அடிப்படையாக அமைந்திருக்க வேண்டும்.

    அந்த மாற்றத்தை நமக்குப் பெற்றுத் தருவது இறைமகன் இயேசுவின் சிலுவை. மீட்பு என்பது நிலைவாழ்வு. இறைவன் தரும் நிறைவாழ்வு. அந்த நிலைவாழ்வை அடையவேண்டு மெனில் நாம் கீழ்க்கண்ட நிலைகளைக் கடக்க வேண்டும். மனம் வருந்துதல், மனம் திரும்புதல், பாவ மன்னிப்பு பெறுதல், மீட்பைப் பெற்றுக் கொள்தல்.

    மனம் வருந்துதல் அதாவது மனஸ்தாபம் முதலில் வரவேண்டும். அது தான் நம்மை மனம் திரும்புதலை நோக்கி வழிநடத்தும். மனம் திரும்புதல் பாவ மன்னிப்பை நோக்கி நம்மை வழி நடத்தும். பாவ மன்னிப்பு நம்மை மீட்பை நோக்கி வழிநடத்தும்.

    மனஸ்தாபமே அடிப்படை. மனஸ்தாபம் படும்போது தான் தந்தையின் விருப்பத்துக்கு நம்மை அர்ப்பணிக்க முடியும். ஆனால் வெறும் மனஸ்தாபம் மட்டுமே நம்மை மீட்புக்குள் கொண்டு செல்லாது.

    இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யூதாஸ் இஸ்காரியோத்து. அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தபின் மனம் வருந்தினான். மனம் வருந்திய அவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனான். அவனுடைய மனஸ்தாபம் அவனை மனம் திரும்புதலுக்கு கொண்டு செல்லவில்லை. வெறுமனே மனஸ்தாபம் கொள்வது மீட்புக்கு நம்மை அழைத்துச் செல்லாது என்பதன் உதாரணமாக இதைக் கொள்ளலாம்.

    மனம் திரும்புதல் என்பது, மனதிலிருக்கும் பாவங்களை ஒத்துக் கொள்வதும், மனதிலும் செயலிலும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதும் ஆகும். 'மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள்' (லூக்கா 13:3) என்கிறார் இறைமகன் இயேசு.

    நினிவே நகர மக்கள் பாவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். எனவே அவர்களை அழிக்க இறைவன் முடிவெடுத்தார். அதை அறிந்த மக்கள் மனஸ்தாபப்பட்டு, மனம் திரும்பினார்கள். அவர்கள் மனம் திரும்பியதைப் பார்த்த இறைவன் மனஸ்தாபப்பட்டார். அது இறைவனின் அன்பை வெளிப்படுத்துகிறது.

    கெட்ட குமாரன் உவமையில் இளைய மகன் தந்தையிடமிருந்து சொத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு வெளியூர் போய் அனைத்தையும் அழிக்கிறான். கடைசியில் வாழ வழியின்றி தவிக்கிறான். தனது தவறை உணர்ந்து மனம் வருந்துகிறான். தந்தையிடம் வந்து தனது பாவத்தை அறிக்கையிடு கிறான். உடனே மீட்பைப் பெற்றுக்கொள்கிறான்.

    இளைய மகன் பாவியாய் வரும்போது தந்தை மனதுருகுகிறார். தனது ஸ்தானத்தை விட்டு இறங்கி ஓடோடிச் சென்று அவனை அரவணைக்கிறார். மனம் வருந்தி, மனம் திரும்பி, பாவமன்னிப்பு கேட்கும் மனநிலைக்கு நாம் வரும்போது இறைவன் மனம் இரங்கி வருகிறார், தனது நிலையை விட்டும் இறங்கி வருகிறார்.

    1. மனம் திரும்புதலின் அழைப்பு இறையரசுக்கானது!

    மனம் திரும்புதலுக்கான அழைப்பு பரலோக ராஜ்ஜியத்தை முன்வைத்து அழைக்கப்படுகிற அழைப்பாக இருக்கிறது. 'மனம் திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது' என இயேசு தனது போதனைகளில் அடிக்கடி குறிப்பிட்டார்.

    இயேசுவின் காலத்தில் மக்கள் ஒரு பூலோக அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் இறைமகன் இயேசுவோ, இறை அரசுக்கான வாழ்க்கைக்கு மக்களை தயாரிக்க வந்தார். எனவே தான் இயேசு தனது போதனைகளின் முதல் அறை கூவலாக, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்றார்.

    இயேசு மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் மனம் திரும்புங்கள் எனும் செய்தியையே பறை சாற்றுகின்றனர். பெற்றுக் கொள்கிற ஆசீர்வாதத்தோடு நமது கிறிஸ்தவ வாழ்க்கை நின்று விடக்கூடாது. நம் மூலமாக இறையரசின் செய்தியை பிறரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    2. மனம் திரும்புதலின் அழைப்பு மகிழ்ச்சிக்கானது

    யார் ஒருவர் இந்த மனம் திரும்புதலின் அழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் மகிழ்ச்சியை பெற்றுக் கொள் கிறார்கள். கூடவே அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

    கெட்ட குமாரனின் கதையிலும் அந்த மனம் திரும்பிய மகனுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைத்தது. அத்துடன் தந்தையையும், கூட இருந்தவர்களையும் அதிக மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

    'கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங் களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்' என்கிறது (ஏசாயா 55:7) விவிலியம்.
    3. மனம் திரும்புதலின் அழைப்பு தேசத்தின் நன்மைக்கானது.

    'நீங்கள் மனம் திரும்பினால் தேசத்தின் நன்மையைக் காண்பீர்கள்' என்கிறது ஏசாயா நூல். எங்கெல்லாம் மனமாற்றம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தேசம் மிகப்பெரிய நன்மையைப் பெற்றுக் கொள்கிறது.

    மோசே தனியே வாழ்ந்து கொண்டிருந்தபோது கடவுள் அவரை அழைத்தார். எரியும் முட்செடியில் அவரிடம் பேசு கிறார். எரியும் முட்செடி எரிந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பானது. அவர்கள் கண்ணீர் கவலை துக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் மடிந்து போகவில்லை. அந்த மரண வேதனையில் இருக்கும் மக்கள் விடுதலையை பெற்றுக் கொள்ள வேண்டும் என இறைவன் விரும்பினார்.

    மோசே எனும் மனிதனுடைய மனமாற்றம் இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்கு காரணமாயிற்று. யோனா எனும் ஒரு இறைவாக்கினரின் மனமாற்றத்தால் நினிவே தேசம் நன்மையைப் பெற்றுக் கொண்டது.

    தவக்காலத்தில் இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம். மனஸ்தாபம் கொள்வோம், மனஸ்தாபம் நம்மை மனம் திரும்புதலுக்கு கொண்டு வரட்டும், மனம் திரும்புதல் நம்மை பாவ மன்னிப்புக்கு அழைத்து வரட்டும். பாவ மன்னிப்பு நமக்கு மீட்பைப் பெற்றுத் தரட்டும்.

    இறையாசீர் உங்களை நிரப்பட்டும்.
    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,
    வேளச்சேரி, சென்னை.
    Next Story
    ×