search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    சிவன் பாதி... விஷ்ணு பாதி... சங்கரன்கோவில்  சிறப்புகள்
    X

    சிவன் பாதி... விஷ்ணு பாதி... சங்கரன்கோவில் சிறப்புகள்

    • ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை.
    • சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை.

    திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு சிவஸ்தலம். ஈஸ்வரன் திருநாமம் சங்கரலிங்கம். அம்மன் திருநாமம் கோமதி. அம்மனுக்கு இன்னொரு திருநாமம் ஆவுடை அம்பாள். அரசு ஆவணங்களில் இந்த ஊர் பெயர் சங்கர நைனார் கோவில் என்று தான் உள்ளது. காலப்போக்கில் மருவி சங்கரன்கோவில் என்று தற்பொழுது அறியப்படுகிறது.

    மதுரை ஆண்ட உக்கிரமபாண்டிய மன்னரால் பதினொன்றாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோவில் இது. இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு இங்கு சங்கரநாராயணன் சன்னதி உள்ளது. சிவபெருமானும் விஷ்ணுவும் சரிபாதியாக அமைந்துள்ள சன்னதி இது. லிங்கோத்பவர் தோன்றிய புற்று இந்த சுவாமி சன்னதியில் வட மேற்கு பகுதியில் காணலாம்.

    சுவாமி கோவிலில் யோக நரசிம்மருக்கும் பிரம்மாவுக்கும் தனி சன்னதிகள் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று மூவரும் எழுந்தருளியுள்ள ஸ்தலம் சங்கரன்கோவில்.

    தல வரலாறுபடி ஆடி மாதம் கோமதி அம்மன் புன்னைவனத்தில் தவம் செய்தாள். ஆனால் ஈசன் தன் மேனியின் ஒரு பாதியை நாராயணருக்கு தந்தார். எனவே அம்மன் ஈசனை மணம் புரிய முடியவில்லை. அம்மன் ஐப்பசியில் மீண்டும் தவம் இருந்து சங்கரலிங்க சுவாமியை மணம் புரிந்தார் என்பது ஸ்தல புராணம். எனவே தான் இந்த கோவிலில் ஆடி தபசும் ஐப்பசி தபசும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    கோமதி அம்மன் சன்னதியில் ஸ்ரீ சக்ர பிரதிஷ்டை உள்ளது. சங்கர நாராயணர் சன்னதியில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. இந்த கோவிலில் தினமும் ஏழு கால பூஜை நடைபெறுகிறது. அர்த்த ஜாம பூஜையின்போது அம்மன் சன்னதியில் பால் நிவேதனம் செய்யப்படுகிறது. அந்த பால் பருகினால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளுகிறாள் அன்னை கோமதி. இங்குள்ள புற்றுமண் சகல நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.

    Next Story
    ×