search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourists"

    • சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகம்.
    • பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வர தொடங்கி உள்ளனர்.

    கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுருளி, கும்பக் கரை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தற்காலி கமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இது போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆன்மீக தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் குவிந்து உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இன்று அதிகாலையில் வருகை தந்தனர்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடினர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.

    இதனைதொடர்ந்து, தனுஸ்கோடி, அரிச்சல் முனை, கோதரண்டராமர் கோவில், ராமர்பாதம் மற்றும் முன்னாள் குடியர வை தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    பக்தர்கள் அதிகளவில் வருகையை முன்னிட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது.
    • மழை காரணமாக சுற்றுலா தலங்கள் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை நேரத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதையடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்கனவே 50ஆயிரம் பூந்தொட்டிகளில் ஜினியா, டேலியா, சால்வியா, கார்னேசன், ஜெர்பெரா, பெர்குன்யா, டெல்பீனியம், டிராகன் உட்பட 50 வகையான மலர்கள், 112 ரகங்களில் நடவு செய்யப்பட்டது.

    தற்போது அந்த மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதேபோல் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பல்வேறு வகையான ரோஜாக்களும் நடவு செய்யப்பட்டு தற்போது அைவகளும் பூத்துக் குலுங்குகிறது.

    ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களை கண்டு ரசித்து போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடி குழந்தைகள் பொழுதை கழித்தனர்.

    படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அந்த பகுதியே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. படகு சவாரி செய்ய பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    தற்போது டிசம்பர் மாதத்தில் இருப்பது போன்ற சீதோசண நிலை இருப்பதால் ஏற்காடு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையுடன் காட்சி அளிக்கிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது. ஓட்டல், பேக்கரி, பஜ்ஜி கடைகளில் சுடச்சுட சுற்றுலா பயணிகள் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர்.

    மேலும் ஏற்காட்டில் விளையும் காய்கறிகளையும் சுற்றுலா பயணிகள் வாங்கி சென்றனர். அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    அடுத்த வாரம் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

    • பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
    • 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வெளியேறி தங்கு தடை இன்றி அடிவாரத்தை நோக்கி வருகிறது.

    குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. அதேபோல் பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

    இதற்கிடையே செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்ட போது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    மேற்கண்ட இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்க ளாகவும் விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.

    வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

    இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு முழு வதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்ய னார் கோவில் ஆறு, செண் பகத்தோப்பு பேயனாறு மற்றும் அதனைச் சார்ந்த நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

    இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இந்தநிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ராஜபாளையம் அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதேபோல் அந்த பகுதியில் மலைப்பகுதியில் வேலைக்குச் செல்பவர்களும் பத்திரமாக சென்று வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வருகிறார். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்க ளில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    • சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. கோடை காலம் தொடங்கியதும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே தினமும் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதல் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, தம்மம்பட்டி, சேலம் மாநகர பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரில் 17.4 மி.மீ. மழை பெய்தது. மேலும் ஏற்காட்டில் 6.6 மி.மீ. மழையும், தம்மம்பட்டியில் 8 மி.மீ. மழையும் என மாவட்டம் முழுவதும் 43 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்தது.

    நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மோகனூர்-34, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-12, ராசிபுரம்-4, திருச்செங்கோடு-11.20, கலெக்டர் அலுவலகம்-3.50, கொல்லிமலை-2. என மாவட்டம் முழுவதும் 66.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே பேரிடர் மேலாண்மை துறையிடம் இருந்து இன்று முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாமக்கல் வனக்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கொல்லிமலை சுற்றுலா பகுதிகளான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, புளியஞ்சோலை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் மேற்கண்ட சுற்றுலா தலங்களுக்கு வரவேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பெய்யும்மழையின் அளவினை பொறுத்து வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா அறிவித்து உள்ளார்.

    • தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை.
    • வரும் 19, 20, 21 ஆகிய நாட்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்.

    தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும், வரும் 19, 20, 21 ஆகிய நாட்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இந்நிலையில், ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மை அறுவுறுத்தியுள்ளது.

    பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
    • நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.

    சேலம்:

    ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

    இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    வழக்கமாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். தற்போது சராசரியாக 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினம் வருகிறார்கள்.

    இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்கள், பஸ்களில் வந்தனர்.இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழச்சி அடைந்தனர்.

    • மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது.
    • பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    புதுச்சேரி:

    கடல் வாணிபத்தில் தமிழர்கள் கொடிகட்டிப் பறந்ததற்கு சான்றாக புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே காக்கையன்தோப்பில் உள்ள அரிக்கன்மேடு பகுதி இருக்கிறது.

    கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இங்கு கி.மு.வில் தொடங்கி கி.பி. வரை வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும் அங்கு ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், அங்கு கிடைத்த சாயத்தொட்டி, உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் ஆகியவை பண்டைய காலத்திலேயே அரிக்கமேடு வாணிபத்தில் சிறந்து விளங்கியதை தெரிவிக்கிறது.

    ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை.பொன்னியின் செல்வன் படத்தில் சில காட்சிகள் அரிக்கன்மேடு பகுதியில் படமாக்கப்பட்டது.

    இதன்பிறகு அரிக்கன் மேடு பகுதி பிரபலமானது புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் படகில் ஆற்றில் கடந்து வந்து இந்த பகுதியை பார்வையிடுகிறார்கள். ஆனால் இங்கு உள்ள வரலாற்று தகவல் எதுவும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் குறிப்பிடப்படவில்லை.

    சுற்றுலா பயணிகளுக்கு தேவையான எந்த ஒரு வசதியும் இல்லை இதனால் அரிக்கன்மேட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பழமையான பண்டைய கலாசாரத்தை அறிய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

    எந்த ஒரு வரலாற்று தகவலையும் தெரிந்து கொள்ளாமல் பாழடைந்த பழமையான வெறும் சுண்ணாம்பு கட்டிடத்தை மட்டுமே பார்த்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தாலும் மற்ற நேரங்களிலும் மாலையிலும் இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

    இங்கு மாலை வேளையில் திறந்தவெளி மதுகூடாரமாக மாறியுள்ளது. இங்கு மதுபிரியர்கள் ஒன்றுகூடி இரவு வரை மது குடிக்கின்றனர் அவர்கள் விட்டுச் செல்லும் மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை இங்கு உள்ள 2 ஊழியர்கள் தினமும் எடுத்துப் போடுவது முக்கிய வேலையாக உள்ளது.

    அரிக்கமேட்டின் பண்டைய வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்காததால் தற்போது சமூக விரோதிகளின் கூடாராமாக மாறியுள்ளது. 

    • பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டிவதைத்து வந்தது. இதனால் புதுச்சேரியில் 100.4 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசியது.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. கிராமப்புறங்களில் மழை அதிகம் பெய்ததால் மழை நீர் பல இடங்களில் தேங்கி நின்றது. இந்த மழை நகர்ப்புற மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.

    இந்நிலையில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

    அதிகாலை முதல் புதுச்சேரி நகரப் பகுதியான கடற்கரை சாலை, உப்பளம், முத்தியால்பேட்டை, முதலியால்பேட்டை, புதிய பஸ் நிலையம் மற்றும் கிராமப் பகுதிகளான வில்லியனூர், பாகூர், திருக்கனூர், கன்னியகோவில், காலாப்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் கோடை விடுமுறையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் வெளியில் மழையில் நனைந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மழையின் காரணமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர்.

    இதற்கிடையே லேசான கடல் சீற்றம் இருந்த புதுச்சேரி கடற்கரையில் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் அங்கிருந்து வெளியேற்றினர். 

    • இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.

    இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.

    இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.

    ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

    சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

    வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.

    • தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
    • ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.

    அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.

    கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.

    வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.

    மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.

    ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.

    இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
    • அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கும் வகையில் குளம் அமைக்கபட்டுள்ளது.

    கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது இந்த பறவைகள் சரணாலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.

    இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கபட்டு சரணாலயத்தை சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு சிறு பாலங்கள், நடை பாதைகள், பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்று எழில்மிகு ரம்மியமாக காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

    இந்த சரணாயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் அதிகம் வருவதுண்டு. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக சீசன் தொடங்கும்.

    இந்த காலத்தில உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு பறவைகளும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்துபூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் குளித்து கும்மாலமிட்டு மீன்களை உணவாக உண்டு மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

    இந்த பறவைகளைகான ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி அருகிலுள்ள கோவை, சேலம், திருச்செங்கோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. ஈரோடு மாவட்ட த்தின் சிறந்த சுற்றுலா தளமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வந்தது. அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

    இந்நிலையில ஈரோடு மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து நாட்டிலேயே 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்தது. 110 டிகிரி பாரன் ஹிட் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

    தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் நிறைவடைந்து சரணாலயம் ரம்யமாக காட்சி அளித்தாலும். வெயிலின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து இல்லை. பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில உள்நாட்டு பறவைகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    • நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
    • கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.

    மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.

    வாகனங்கள் அதிக சூடாகி ரேடியேட்டர் பழுதானாலும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தக்கூட இடமில்லாத நிலையும், ஒரே சீராக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியாத அளவில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது. ஆனால் கோடை சீசன் முடியும் காலம் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    ஒவ்வொரு சீசன் காலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தவறும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை எதிர்வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    ×