search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷசாம்"

    டேவிட் எஃப் சான்ட்பெர்க் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `ஷசாம்' படத்தின் விமர்சனம். #Shazam #ShazamReview
    மாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். வருடங்கள் ஓடிப்போக தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    இதில் மந்திரவாதி சிறுவன் ஒருவனை சோதனைக்கு உட்படுத்துகிறார். சோதனையில் சிறுவன் தீயசக்திகளை விடுவிக்க முயற்சிக்கிறான். தக்க நேரத்தில் மந்திரவாதி சிறுவனை தடுத்து வெளியே அனுப்பிவிடுகிறார்.



    சில ஆண்டுகளுக்கு பிறகு, பெரிய ஆளாக மாறிய பிறகு மீண்டும் அந்த இடத்திற்கு போவதற்கான வழியை அறிந்து அங்கு சென்று தீய சக்திகளை விடுவிக்கிறான். தீய சக்திகள் அவன் உடலினுள் சென்று தீய சக்திகளின் அதிபதியாகிறான்.

    இதையடுத்து தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெடுக்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளை இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.



    ஷசாம் வெகுளித்தனம் நிறைந்த காமெடி கதாபாத்திரத்தில் வருகிறார். சிறுவயதில் அம்மாவை பிரிந்த ஏக்கத்திலும், ஷசாமாக மாறும் போதும், மாறிய பிறகு செய்யும் குறும்புகளும் ரசிக்கும்படியாக சிரிக்க வைக்கின்றன. ஒரு சிறுவன் போல் தன்னை மாற்றிக் கொண்டு நடித்திருக்கும் சாச்சரி லீவிவுக்கு பாராட்டுக்கள். மார்க் ஸ்டிராங் வில்லத்தனத்தில் பாரபட்சமின்றி மிரட்டியிருக்கிறார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

    பெற்றோரால் பாதிக்கப்படும் நாயகன், வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் கதை. அதில் மாந்திரீகம், பாசம், காமெடி, சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க். குறிப்பாக படம் முழுக்க முழுக்க காமெடியாகவே நகர்வது பாராட்டுக்குரியது. குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.



    பெஞ்சமின் வால்பிச்சின் பின்னணி இசை, மேக்ஸிம் அலெக்சாண்டரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `ஷசாம்' சாகசம். #Shazam #ShazamReview

    ×