search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளை அகற்ற எதிர்ப்பு"

    • நீதிமன்ற உத்தரவின் படி நீர் ஆதாரப்பகுதிகளில் குடியிருக்க அனுமதி இல்லை
    • குடியிருக்கும் இடத்தை வருவாய்த் துறையினர் காலி செய்ய உத்தரவிட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரிபாளையம் என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில்,அவர்கள் குடியிருக்கும் பகுதி குட்டை என வருவாய்த்துறை ஆவணங்களில் இருப்பதால் அந்த இடத்தை காலி செய்யும்படி கடந்த சில வாரங்களுக்கு முன் வருவாய் துறையினர் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த இடத்தை வகை மாற்றம் செய்து எங்களுக்கு வழங்க வேண்டும் என வருவாய்த்துறையிடம் முறையிட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி நீர் ஆதாரப்பகுதிகளில் குடியிருக்க அனுமதி இல்லை என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர், அங்கு குடியிருப்பவர்களிடம் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுப்பதற்காக சென்றபோது அப்பகுதி மக்கள் அவரை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார், பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் தாசில்தாரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களது சக்தியையும் மீறி அதிக செலவு செய்து வீடுகள் கட்டி வசிப்பதாகவும், எனவே அந்த இடத்திலேயே தங்களை வசிக்க விடும்படி பெண்கள் கண்ணீருடன் முறையிட்டனர்.

    இதற்கு தாசில்தார் நந்தகுமார் வருவாய்த்துறை ஆவணங்களில் குட்டை என்று உள்ளதால் அந்த இடத்தில் வசிக்க முடியாது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நாங்கள் நடவடிக்கை எடுக்க இல்லையென்றால், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசிவிட்டு சொல்கிறேன் என கூறினார்.

    இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை இடுவதற்கு முன்பு பல்லடம் எம்.எல்.ஏ., எம். எஸ். எம். ஆனந்தனை பொதுமக்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தனர். இது குறித்து அவர் கூறியதாவது:- குடியிருக்கும் இடத்தை வருவாய்த் துறையினர் காலி செய்ய உத்தரவிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறை நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×