search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு பேருந்துகள்"

    • தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.
    • சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது.

    சென்னை:

    அரசு விரைவு பஸ்களில் தொடர் பயணம் மேற்கொள்வோருக்கு வழங்கப்படும் கட்டணச் சலுகை திட்டங்களின் கீழ் சுமார் 10 ஆயிரம் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சொகுசு, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட 1,078 பஸ்கள் உள்ளன.

    இந்த பஸ்கள் 300 கி.மீட்டருக்கு மேற்பட்ட நீண்ட தூரப் பயணத்துக்காக 251 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. விரைவு பஸ்களில் பயணிப்பதை ஊக்குவிக்க பல்வேறு பயணச் சலுகை திட்டங்கள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி ஊருக்குச் சென்று திரும்புவதற்கான பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் இணைய வழியில் முன்பதிவு செய்தால், திரும்பி வருவதற்கான பயணச்சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. ஒரு மாதத்தில் 5 முறை பயணம் செய்வோருக்கு அடுத்த ஒவ்வொரு பயணத்துக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகையாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 10 சதவீத கட்டணச் சலுகையும், கடந்த மே 1-ந்தேதி முதல் 50 சதவீத கட்டணச் சலுகையும் அமலில் உள்ளது.

    தொடர் பயணம் மேற்கொள்வோருக்கான 50 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 487 பேர் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் பயணிகள் ரூ.1 லட்சத்து 8,586 சேமித்துள்ளனர். இதேபோல் 10 சதவீத சலுகை திட்டத்தில் இதுவரை 9,353 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இதன்மூலம் பயணிகள் ரூ.4 லட்சத்து 46 ஆயிரத்து 632 சேமித்துள்ளனர். இவ்வாறு 2 சலுகை திட்டங்களின் மூலமாகவும் மொத்தமாக பயணிகளுக்கு ரூ.5.55 லட்சம் மிச்சமாகி உள்ளது.

    இந்த சலுகையானது விழா, விடுமுறை நாட்களுக்கு பொருந்தாது. இவ்வாறான திட்டங்கள் மற்றும் சேவைகள் காரணமாக விரைவு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சேவையை மேம்படுத்துவது மற்றும் நவீனவசதி கொண்ட பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×