search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை தடுப்பு சட்டம்"

    • சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
    • புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    மதுரை:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர்.

    இந்த வழக்கு விசாரணையின் பேரில் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டனர். அவர்களின் குடும்ப விவகாரத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்காமல் எங்கள் மீதான வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். எங்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் சட்டத்திற்கு மாறாக காவல்துறையினர் மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதாடினார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த பெண்ணின் புகாரில், கணவரின் இரண்டாவது மனைவியின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார்.

    வரதட்சணை சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது ரத்த உறவு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இங்கு சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.

    அந்த புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். எனவே மனுதாரர்கள் மீதான வழக்கின் இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.

    ×