search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கியில் கொள்ளை முயற்சி"

    • கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
    • கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கி உள்ளது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வங்கி கணக்கு வைத்து உள்ளனர். நகையையும் அடமானம் வைத்து பணம் பெற்று வருகின்றனர்.

    இந்த வங்கியில் கரும்பாக்கம், அண்ணா நகரை சேர்ந்த ஆபேல் (65) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் வங்கி திறக்கப்படவில்லை. ஆபேல் வழக்கம் போல் நேற்று இரவு பாதுகாப்பு பணியில் இருந்தார்.

    நள்ளிரவு 2 மணியளவில் முகமூடி அணிந்து 4 பேர் கும்பல் திடீரென அங்கு வந்தனர். அவர்கள் காவலாளி ஆபேலை சரமாரியாக தாக்கினர். அவரை சத்தம் போடக்கூடாது என்று மிரட்டல் விடுத்து கைகளை கட்டினர். பின்னர் காவலாளி ஆபேலை அருகில் உள்ள கழிவறையில் அடைத்தனர்.

    இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் கடப்பாரையால் வங்கியின் பின்பக்க சுவரை துளையிட்டு உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

    இதனால் கொள்ளை திட்டத்தை கைவிட்டு கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இன்று அதிகாலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது காவலாளி ஆபேலின் முனகல் சத்தம் கேட்டு அங்கு சென்றனர்.

    அப்போது தான் கொள்ளை கும்பல் ஆபேலை கழிவறையில் கட்டிப்போட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் தாக்கியதில் காவலாளி ஆபேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது.

    அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வங்கியின் அருகே வீடுகள் இல்லாததால் கொள்ளையர்கள் காவலாளியை தாக்கிய போது யாருக்கும் தெரியவில்லை. கொள்ளையர்களின் திட்டம் பலிக்காததால் வங்கியில் இருந்த பல லட்சம் பணம், நகை தப்பியது.

    கொள்ளையர்கள் சுவரில் துளைபோட முயன்ற போது ஆட்கள் நடமாட்டத்தை கண்டு தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து கொள்ளையில் ஈடுபட முயன்ற கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை முயற்சி நடந்த வங்கியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பார்வையிட்டார்.

    மோப்பநாய் வங்கியில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. எனவே அங்கிருந்து கொள்ளை கும்பல் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×