search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி அதிகாரிகள் போராட்டம்"

    தமிழகத்தில் உள்ள அனைத்து கனரா வங்கி கிளை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாளை வங்கிகள் மூடப்படுகின்றன. #Canarabank
    சென்னை:

    இந்தியா முழுவதும் கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 3½ லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    தமிழகத்தில் சுமார் 600 கனரா வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கிளைகளில் பணியாற்றும் 15 ஆயிரம் அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறார்கள்.

    குறைந்தபட்ச சம்பள விகித அடிப்படையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் இணைப்பினை கைவிட வேண்டும். தேக்க நிலையற்ற சம்பள விகிதங்கள் வழங்க வேண்டும். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஸ்டேட் வங்கி போன்ற மருத்துவ காப்பீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    அனைத்து வங்கிகளிலும் வங்கி அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான சம்பள விகிதங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கனரா வங்கி கிளை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாளை வங்கிகள் மூடப்படுகின்றன. அந்தந்த கிளை அதிகாரிகள் வங்கியினை பூட்டி சென்று விடுவார்கள். ஊழியர்கள் வேலைக்கு வந்தாலும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படும்.

    வேலை நிறுத்தம் குறித்து கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் கூறியதாவது:-

    அகில இந்திய அளவில் நாளை வேலை நிறுத்தம் நடக்கிறது. தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. இதில் உள்ள அதிகாரிகள் வேலைக்கு செல்லமாட்டார்கள். பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருக்கும்.


    ஊழியர்கள் வேலைக்கு சென்றாலும் கூட அதிகாரிகள் இல்லாமல் வங்கி பணிகள் நடைபெறாது. பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல், காசோலை பரிமாற்றம் போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை.

    லாக்கரில் இருந்து பணம் எடுத்து கொடுப்பது, ரகசிய கீ போன்றவற்றை அதிகாரிகள்தான் செயல்படுத்த முடியும். ஸ்டிரைக் காரணமாக காசோலை, பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறாது.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் நடைபெறும். அதில் அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Canarabank
    ×