search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய துணைக்குழு ஆய்வு"

    • அணையில் பருவநிலை மாற்றங்களின்போது அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது
    • அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை கண்டறியும் ஒரு ஆக்சிலோகிராப், 2 சீஸ்மோகிராப் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.

    ஆனால் கேரள அரசு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என ெதாடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக உச்சநீதிமன்றம் மூவர் குழு அமைத்தது. மேலும் அவர்களுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அணையில் ஆய்வு செய்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து வருகின்றனர்.

    அதன்படி தற்போது அணையில் பருவநிலை மாற்றங்களின்போது அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. மத்திய நீர்வளக்குழு செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில், தமிழக அரசு பிரதிநிதிகளாக அணையின் செயற்பொறியாளர் ஷாம்இர்வின், கோட்டபொறியாளர் குமார், கேரள அரசின் பிரதிநிதிகளாக பொதுப்பணித்துறை நீர்பிரிவு செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவிபொறியாளர் பிரசித் ஆகியோர் தேக்கடி படகுதுறையில் இருந்து அணைப்பகுதிக்கு சென்றனர்.

    அணைப்பகுதியில் நிலநடுக்கத்தை கண்டறியும் ஒரு ஆக்சிலோகிராப், 2 சீஸ்மோகிராப் கருவிகளை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட துணைக்குழுவினர் கருவியின் செயல்பாடு குறித்த விளக்கங்களை கேட்டறிந்தனர். பின்னர் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதியில் நீர்கசியும் அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மேலும் கேரளாவுக்கு உபரிநீர் செல்லும் 13 மதகுகளில் 3 மதகுகளை இயக்கி பார்த்தனர்.

    மாலையில் குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வல்லக்கடவு வழியாக தரைப்பாலம், சாலை அமைக்க வேண்டும் என தமிழக பொறியாளர்கள் வலியுறுத்தினர். மத்திய கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்த சரவணக்குமார் இடமாற்றம் செய்யப்பட்டதால் சதீஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பங்கேற்கும் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

    முல்லைபெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக 4 டிப்பர் லாரி கற்கள் வண்டிபெரியாறு, வல்லக்கடவு வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது போலீசார் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். டிரைவர் மட்டும் இருக்கவேண்டும். சுத்தம் செய்யும் பணியாளர்கள் இருக்ககூடாது என தெரிவித்தனர். மேலும் 3 டிப்பர் லாரிகளில் வந்த பணியாளர்கள் ராஜன், ரெஞ்சு, சபரீசன் ஆகிய 3 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    ×