search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் மீது தாக்குதல்"

    கொல்கத்தா நகரின் தெற்கு பகுதியில் உள்ள பள்ளியில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். #KolkataSchool
    கொல்கத்தா:

    கொல்கத்தா நகரின் தெற்கில் உள்ள தக்கூரியா பகுதியில் சிறுமிகள் மட்டும் பயிலும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் யூ.கே.ஜி. வகுப்பில் படிக்கும் 5 வயது சிறுமி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு போக மாட்டேன் என்று அழுது ரகளை செய்து வந்தாள்.

    அதற்கான காரணத்தை சமீபத்தில் அறிந்த பெற்றோர் அந்த சிறுமி கூறியதை கேட்டு ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தனர். அப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் கடந்த மாதம் 26-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவள் கூறியதை கேட்ட பெற்றோரும், உறவினர்களும், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இன்று காலை அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.

    சிறுமியால் குற்றம்சாட்டப்படும் ஆசிரியரை பணிநீக்கம் செய்வதுடன் அவரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்துக்குள் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பெண்கள் திரண்டதால் அவ்வழியாக செல்லும் வாகனப் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சமாதானமாக பேசி அவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து போக மாட்டோம் என அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்றுகூட கருதாமல் போலீசார் கண்மூடித்தனமாக தடியடி பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஓரிரு பெண்களின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் வழியும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பின.

    தடியடிக்கு பின்னர் அப்பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்குள்ளான ஆசிரியர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக கொல்கத்தா நகர போலீசார் தெரிவித்தனர். #KolkataSchool
    ×