search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவர்கள் போராட்டம்"

    • மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி என்பவர் கூடுதல் பொறுப்பாக மசினகுடி அரசு பள்ளிக்கு நியமிக்கப்பட்டார்.

    கூடலூர்,

    கூடலூர் அருகே மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சோலூர் அரசு பள்ளியில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி என்பவர் கூடுதல் பொறுப்பாக மசினகுடி அரசு பள்ளிக்கு நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சி அளித்ததன் மூலம் கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

    இந்தநிலையில் மசினகுடி அரசு பள்ளிக்கு வேறு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இதனால் உடற்கல்வி ஆசிரியர் சிவாஜி சோலூர் பள்ளியில் பணியாற்ற கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை அறிந்த மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். தொடர்ந்து வகுப்புகளுக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடற்கல்வி ஆசிரியரை அதே பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் போலீசார், அதிகாரிகள் வந்து உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில் நேற்று உடற்கல்வி ஆசிரியரை தொடர்ந்து பணியாற்ற அனுமதிப்பதற்கான ஆணையை வழங்கினால் மட்டுமே வகுப்புகளுக்கு செல்வதாகவும், அதுவரை போராட்டத்தில் ஈடுபோட போவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

    அவர்களுடன் பெற்றோரும் பலர் வந்திருந்தனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் சாலையில் அமர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலை 3 மணிக்கு உடற்கல்வி ஆசிரியர் மசினகுடி பள்ளியில் தொடர்ந்து பணியாற்றலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து ஆணை வந்தது. அதன் பின்னரே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வகுப்புகளுக்கு சென்றனர்.

    ×