search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி."

    சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி பலியானார்.
    சென்னை:

    சென்னை கமிஷனர் அலுவலகம் எதிரே வேகத்தடையில் மோதி திருச்சியை சேர்ந்த நகை வியாபாரி பலியானார்.

    அவர் வழிப்பறி திருடர்களை விரட்டி சென்ற போது விபத்தில் சிக்கினாரா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது 68). இவர் அதே பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள மொத்த நகை வியாபாரிகளிடம் தங்கக்கட்டிகளை வாங்கி சென்று நகைகளாக மாற்றி விற்பனை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் திருச்சியில் இருந்து வாரம் இரண்டு முறை மலைக்கோட்டை ரெயில் மூலம் சென்னை வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    சவுகார்பேட்டை செல்வதற்கு வசதியாக திருச்சி பதிவெண் கொண்ட தனது ஸ்கூட்டரை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் ரெங்கராஜன் நேற்று முன்தினம் தங்கக்கட்டி வாங்குவதற்காக சென்னை வந்தார்.

    எழும்பூரில் நிறுத்தப்பட்டிருந்த தனது ஸ்கூட்டர் மூலம் சவுகார்பேட்டை சென்றார். அங்கு 500 கிராம் தங்கக்கட்டியை வாங்கிக்கொண்டு மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

    சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே வந்த போது வேகத்தடையில் நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் ரெங்கராஜன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஆம்புலன்சு வாகனம் மூலம் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ரெங்கராஜன் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து விபத்து தொடர்பாக அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ரெங்கராஜன் பலியான தகவல் திருச்சியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் நேற்று காலை சென்னை வந்தனர்.

    ரெங்கராஜன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய மகன் வெங்கடேசன் வேப்பேரி போலீஸ்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் ‘தன்னுடைய தந்தை 500 கிராம் தங்கக்கட்டியை வாங்குவதற்காக சென்னை வந்திருந்தார். அந்த தங்கக்கட்டியை காணவில்லை. எனவே வழிப்பறி திருட்டில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்தார்.

    இதையடுத்து விபத்து நடந்த போலீஸ் கமிஷனர் அலுவலக நுழைவுவாயில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் ரெங்கராஜன் ஸ்கூட்டரை அதிவேகமாக ஓட்டி வந்து வேகத்தடையில் நிலைதடுமாறி சாலையில் விழும் காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே ரெங்கராஜன் தங்கக்கட்டியை வாங்கி வந்த போது, அதை மர்ம நபர்கள் வழிப்பறி செய்து தப்பி இருக்கலாம். அவர்களை ஸ்கூட்டரில் ரெங்கராஜன் விரட்டி வந்த போது விபத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் வேப்பேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
    ×