search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் கலெக்டர், எஸ்.பி.யிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மே 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானவர்களில் 4 பேர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இது குறித்து விசாரணை செய்வதற்காக மத்திய அரசின் தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் முடிவு செய்தது. இதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன் தலைமையில் விசாரணை ஆணையத்தினர் நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் விசாரணையை தொடங்கினர்.

    முன்னதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அதிகாரி வீரப்பன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாநகராட்சி கமி‌ஷனர் ஆலிப் ஜான் வர்க்கீஸ், சப்-கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

    விசாரணைக்காக துப்பாக்கி சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தினர் நான்கு பேரும் வந்திருந்தனர். அவரிடம் துப்பாக்கி சூடு தொடர்பான அனைத்து விபரங்களையும் துணைத்தலைவர் முருகன் கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில் மற்றும் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது.

    துப்பாக்கிச் சூட்டில் இறந்த செல்வசேகரின் அக்கா சீதா, அவரது சகோதரர் வக்கீல் ஜெயகுமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் இறந்த காளியப்பனின் தாய் மகேஸ்வரி, கந்தையாவின் மனைவி செல்வமணி, ஜெயராமனின் மனைவி பாலம்மாள், மகள் நந்தினி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது. துப்பாக்கி சூடு நடைபெற்ற அன்று பணியில் இருந்த அதிகாரிகள், மருத்துவ கல்லூரி டீன், டாக்டர்கள் உள்ளிட்டோரிடம் இன்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்காக முன்னாள் கலெக்டர் வெங்கடேஷ் இன்று பகல் 10.54 மணிக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பாக ஆஜரானார்.

    அவரிடம் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அப்போது துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விவரங்களை ஆணைய துணைத்தலைவர் முருகன் கேட்டார். மேலும் துப்பாக்கி சூட்டிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தது எப்படி என்பது பற்றியும் முன்னாள் கலெக்டர் வெங்கடேசிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அப்போது பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் விசாரணை நடத்தப்பட்டதால் விசாரணை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. விசாரணையின் அடுத்த கட்டமாக நாளை (சனிக்கிழமை) தற்போது பணியில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.

    மேலும் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கும் சென்று ஆணைய துணைத்தலைவர் முருகன் நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார். இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை ஆணையம் ஜனாதிபதியிடம் தாக்கல் செய்ய உள்ளது.


    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினர், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தமாதம் (மே) 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் பேரணியாக சென்றனர். அப்போது தீ வைப்பு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். அவர்களை ஒடுக்க போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    தூத்துக்குடியில் நடந்த மோதல், துப்பாக்கி சூடு, கலவரம் குறித்து மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டனர்.

    தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர்.

    மேலும் துப்பாக்கி சூடு நடந்தபோது பணியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு வார காலம் கள விசாரணையில் ஈடுபட்ட அவர்கள், பின்பு விசாரணையை முடித்து கொண்டு டெல்லிக்கு புறப்பட்டனர். அவர்கள் தற்போது விசாரணை அறிக்கையை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதே போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி வந்து நேரடி விசாரணை நடத்தினார்.

    அவர் துப்பாக்கிசூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிட்டு கள ஆய்விலும் ஈடுபட்டார். அவர் தனது அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் தூத்துக்குடியில் மீண்டும் தொடங்குகிறார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் சாயர்புரம் அருகே உள்ள பேய்குளத்தை சேர்ந்த செல்வசேகர், தாளமுத்துநகர் காளியப்பன், மில்லர்புரம் சிலோன் காலனி கந்தையா, உசிலம்பட்டி ஜெயராமன் ஆகிய 4 பேர் மற்றும் காயமடைந்தவர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர்.

    இதனால் அவர்கள் பலியானது குறித்து விசாரணை நடத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அவர் தனது விசாரணையை இன்று தொடங்கினர். அவர்கள் வருகிற 30-ந்தேதி வரை விசாரணையில் ஈடுபடுகிறார்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துகிறார். விசாரணையின் முதல் நாளான இன்று, முதலில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்பு தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான தாழ்த்தப்பட்டோரான செல்வசேகர், காளியப்பன், கந்தையா, ஜெயராமன் ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் 2-வது நாளான நாளை (29-ந்தேதி) தூத்துக்குடியில் கலவரம் நடந்த போது கலெக்டராக இருந்த வெங்கடேஷ், போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் துப்பாக்கி சூடு நடத்தியதிற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்.

    3-வது நாளில் (30-ந்தேதி) தற்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்கிறார். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

    தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் தூத்துக்குடியில் 3 நாட்கள் விசாரணை நடத்துகிறார். முதல் நாளான இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்.

    நாளை (29-ந்தேதி) முன்னாள் தூத்துக்குடி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரி களிடமும், நாளை மறுநாள் தற்போதைய கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துகிறார். மேலும் கலவரம் தொடர்பாக மனு அளிப்பவர்களிடம் மனு வாங்கி, அதன் மீதும் விசாரணை நடத்துவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    ×