search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி அனல் மின்நிலையம்"

    • லிங்க் கன்வேயர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
    • வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கும், வ.உ.சி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி கொண்டு செல்வதற்காக சுமார் ரூ.250 கோடி செலவில் லிங்க் கன்வேயர் பெல்ட் மற்றும் துறைமுகத்தில் உள்ள 1-வது கரித்தளம் மறு சீரமைப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது. தொடர்ந்து 2 ஆண்டுகள் அந்த கன்வேயர் பெல்ட்டை அந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும்.

    அதன்படி பராமரிப்பு பணியையும் மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா?, வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் அடங்கிய குழுவினர் 3 கார்களில் தூத்துக்குடி அனல் மின்நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர்.

    அவர்களில் 3 பேர் அனல் மின்நிலையத்துக்கும், மற்றவர்கள் வ.உ.சி. துறைமுகம் கரித்தளத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவன மேலாளர், அனல் மின்நிலைய அதிகாரிகள் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அதேபோன்று லிங்க் கன்வேயர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த சிறிய ஒப்பந்ததாரர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்தும் பல்வேறு ஆவணங்களை பெற்றனர். அனல் மின்நிலையத்தில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். இந்த விசாரணை நேற்று மாலை வரை நீடித்தது.

    இந்நிலையில் கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படை யில் இன்று 2-வது நாளாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக இன்று 11 பேர் கொண்ட அதிகாரிகள் கார் மூலம் வந்தனர். அனல் மின்நிலையத்திற்கு சென்ற அவர்கள் துணை ஒப்பந்ததாரர்களை வரவழைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவர்களிடம் வரவு-செலவு கணக்குகளை தாக்கல் செய்யுமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×