search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அரசு அறிவிப்பு"

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த குறும்படத்திற்கு ரூ.7 லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    சென்னை:

    தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அ.உதயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான தரமான விளம்பர படங்கள், தயாரிப்பாளர்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள், திரைப்பட இயக்குனர்கள், திரைப்பட பயிற்சி மையம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. குறும்படங்கள் சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை, தரைதளத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வரும் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

    குறும்படங்கள் சுற்றுச் சூழல் பிரச்சினையில் இருந்து பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக நிலம், காற்று, நீர், வனம் மற்றும் தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில் ஊடகங்களில் விளம்பரப்படுத்தும் வகையில் தமிழ் மொழியில், தயாரிப்பாளர்களின் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குறும்படங்களில் சிறந்த குறும்படத்திற்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் வழங்கப்படும். மேலும், 2-வது பரிசாக ரு.6 லட்சமும், 3-வது பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-2433 6421 என்ற தொலைப்பேசி எண்ணிலும், tndoe@tn.nic.in என்ற மின்அஞ்சல் முகவரியிலும், www.environment.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.   #TamilnaduGovernment #ShortFilm #EnvironmentalProtection
    குடிமராமத்து திட்ட பணிகளை கண்காணிப்பதற்காக 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில், 2016-17-ம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 1,511 ஏரிகளில் புணரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ஏரிகள் புணரமைப்பு பணிக்கான ரூ.328.95 கோடி ஒதுக்கப்பட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.

    இந்த திட்ட அறிக்கைக்கு அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கடந்த வாரம் குடிமராமத்து பணிகளை பாசன விவசாயிகள் சங்கம், விவசாய அமைப்புகள் சார்பில் தொடங்கப்பட்டன.

    1,511 ஏரிகளில் ஆயிரம் ஏரிகளில் புணரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 511 ஏரிகளில் விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழ்நிலையில், புணரமைப்பு பணிகளை விரைவில் முடிக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி குடிமராமத்து பணிகளை கண்காணிக்கும் வகையில் 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    அதன்படி, திருவண்ணாமலை பெண்ணையாறு மற்றும் கடலூர் வடிநில வட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு, தமிழக அரசின் வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. வேலூர் நீர்வளத்துறை திட்டவட்டம் மற்றும் சென்னை பாலாறு வடிநில வட்டம் மற்றும் வேலூர் குளம் நவீனப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிக்க உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா நியமிக்கப்பட்டு உள்ளார்.

    பெரியார், வைகை வடிநில வட்டம் மற்றும் கீழ் வைகை வடிநில வட்டத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலும், வைப்பார் வடிநில வட்டம் மற்றும் தாமிரபரணி வடிநில வட்ட பகுதியை பேரிடர் மேலாண்மை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ ஆகியோர் கண்காணிக்க உள்ளனர்.

    சேலம் மேல் காவிரி வடிநில வட்டம் மற்றும் பழனி சிறப்பு திட்ட வட்டம் ஆகியவற்றில் நடக்கும் குடிமராமத்து பணியை திட்ட வளர்ச்சித்துறை செயலாளர் ஆஷிஸ் வச்சானி கண்காணிப்பார். நடு காவிரி வடிநில வட்டம் மற்றும் கீழ் காவிரி வடிநில வட்டத்தை தேசிய சுகாதார மைய இயக்குனர் தாரேஸ் அகமதுவும், ஈரோடு பவானி வடிநில வட்டம் மற்றும் பரம்பிகுளம் ஆழியாறு வடிநில வட்டத்தை கால்நடைத்துறை செயலாளர் கே.கோபாலும் கண்காணிக்க உள்ளனர்.

    இந்த உத்தரவை தமிழக அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்து உள்ளார். 
    ×