search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ. 500"

    பணமதிப்பிழப்பு திட்டம் அறிவித்தபோது அவசர அவசரமாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதற்காக ரூ.7965 கோடி செலவிடப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி அப்போது புழக்கக்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாதிகளுக்கு பணம் செல்வதை தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

    பணமதிப்பிழப்பு செய்த போது நாட்டில் புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில் 86 சதவீதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக இருந்தன. அவை திடீரென ஒழிக்கப்பட்டதால் மக்களிடம் பணம் இல்லாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    ஒழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.500, ரூ.2000 புழக்கத்தில் விடப்பட்டது. ஆனாலும் அந்த பணம் போதுமான அளவுக்கு அச்சடித்து சப்ளை செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பெரும் திண்டாட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக அவசர அவசரமாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடித்து அனுப்பும் பணியை செய்தது. அப்போது இந்த நோட்டுகளை அச்சடிப்பதற்காக மட்டுமே ரூ.7965 கோடி செலவிட்டதாக இப்போது தெரியவந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கு ரூ.3421 கோடி செலவிட்டிருந்தனர். பண மதிப்பிழப்பால் அச்சடிப்பு கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது.


    நாடு முழுவதும் பண தட்டுப்பாடு இருந்ததால் அச்சடிக்கப்பட்ட பணத்தை உடனடியாக நாட்டின் அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டியது இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையின் விமானங்களை பயன்படுத்தினார்கள். சி-17, சி-137ஜே ஹெர்குலஸ் ஆகிய விமானங்களில் புதிய ரூபாய் நோட்டுகள் எடுத்து செல்லப்பட்டன.

    இவ்வாறு 86 முறை விமானங்கள் ரூபாய் நோட்டுக்களை ஏற்றிச் சென்றன. இதற்காக தனியாக ரிசர்வ் வங்கி ரூ.29 கோடியே 41 லட்சம் கட்டணமாக இந்திய விமானப்படைக்கு செலுத்தியது.

    முன்னாள் ராணுவ கமாண்டர் லோகேஷ்பத்ரா தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதுபற்றிய தகவல்களை கேட்டிருந்தார். அவருக்கு இந்த விவரங்கள் பதிலாக கொடுக்கப்பட்டுள்ளது.

    ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் பெரிய அளவில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதுவும் எதிர்பார்த்தபடி அமையவில்லை.

    10 லட்சம் 500 ரூபாய் நோட்டில் 7.1 நோட்டுகள் மட்டுமே கள்ள நோட்டு இருந்ததாகவும், 10 லட்சம் 1000 ரூபாய் நோட்டில் 19.1 நோட்டுகள் மட்டுமே கள்ள நோட்டாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் தனது லாபத்தில் குறிப்பிட்ட தொகையை மத்திய அரசுக்கு பங்கு தொகையாக வழங்கும். ஆனால் புதிய ரூபாய் நோட்டு அச்சடிப்பு மற்றும் அவற்றை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை இந்த பங்கு தொகையில் கழித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
    ×