search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை எழும்பூர் ரெயில் நிலையம்"

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் குறைந்த அளவே முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படுகின்றன. இதனால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர். #EgmoreRailwayStation #ReservationCounter
    சென்னை:

    சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு எழும்பூர் ரெயில் நிலையம் பிரதான முனையமாக செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் தினசரி 56 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 240-க்கும் மேற்பட்ட புறநகர் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தனி டிக்கெட் கவுண்ட்டர்களும், முன்பதிவில்லா டிக்கெட் எடுக்க தனி கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புறநகர் ரெயில்களுக்கு டிக்கெட் எடுக்க தனி கவுண்ட்டர்களும் உள்ளன. அவசர காலங்களில் பெரும்பாலான பயணிகள் முன்பதிவில்லா டிக்கெட் பெற்று பயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    பெரும்பாலும் மாலை நேரத்தில் தான் ரெயில் நிலைய முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்தநிலையில் நேற்று எழும்பூர் ரெயில் நிலைய முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களில் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

    எப்போதும் செயல்படும் 6 கவுண்ட்டர்களில் நேற்று 3 மட்டுமே செயல்பட்டன. 3 மூடப்பட்டிருந்தன. பயணிகள் நீண்ட வரிசையில் முன்பதிவில்லா டிக்கெட்டுக்காக காத்திருந்தனர். ரெயில்களில் ஒரு சில முன்பதிவில்லா பெட்டிகளே உள்ளன. அதில் இடம் கிடைப்பதே சில பயணிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. அப்படி இருக்கையில் டிக்கெட் வாங்குவதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது பயணிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    டிக்கெட் கவுண்ட்டர்கள் செயல்படாதது குறித்து ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் 36 ஊழியர்கள் டிக்கெட் கவுண்ட்டர்களில் பணி புரிய வேண்டும். அதில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 9 பேர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். இதனால் கூடுதல் கவுண்ட்டர்கள் இயக்க முடியவில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். கூடிய விரைவில் 4 காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பயணி ஒருவர் கூறுகையில், ‘நான் 30 நிமிடங்கள் காத்திருந்துதான் டிக்கெட் எடுக்க முடிந்தது. முன்பதிவில்லா பெட்டிகளில் இடம் கிடைப்பதே பெரிய விஷயம். இதில் டிக்கெட் கவுண்ட்டர்கள் சரியாக செயல்படாததால் ரெயிலை உரிய நேரத்தில் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருப்பதால் சில சமயங்களில் டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் ஏற வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் டிக்கெட் பரிசோதகர் வரும் சமயத்தில் கையை கட்டி நிற்கவேண்டிய சூழல் உருவாகி விடுகிறது. எனவே ரெயில்வே நிர்வாகம் கூடுதலாக முன்பதிவில்லா டிக்கெட் கவுண்ட்டர்களை செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
    ×