search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பள பாக்கி"

    • ரனிபா டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்
    • நிலேஷை ரனிபா பிறருடன் சேர்ந்து அலுவலக மாடிக்கு அழைத்து சென்றார்

    குஜராத் மாநில கதியாவார் தீபகற்ப பகுதியில் உள்ள நகரம், மோர்பி (Morbi). இந்நகரம், செராமிக் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணியில் உள்ளதால், இங்கு கட்டிடங்களில், சுவர்களிலும், தரையிலும் ஒட்டப்படும் "டைல்ஸ்" வர்த்தகத்தில் பல தொழிலதிபர்கள் பல காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்குள்ள ரவாபார் குறுக்குசாலையில் ரனிபா (என்கிற விபூதி படேல்) என்பவர் ரனிபா இண்டஸ்ட்ரீஸ் எனும் டைல்ஸ் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவர் சகோதரன் ஓம் படேல், இவருக்கு உதவியாக உள்ளார்.

    இவர்கள் நிறுவனத்தில் நிலேஷ் தல்சானியான் எனும் தொழிலாளி ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்திற்கு பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 18 அன்று அவரை ரனிபா திடீரென வேலையை விட்டு நிறுத்தி விட்டார்.

    இதையடுத்து, பாதி மாத சம்பளத்தை மேலாளர் பரிக்ஷித் என்பவரிடம் நிலேஷ் பல முறை கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து சென்ற நிலேஷ், தன் சகோதரர் மேகுல் மற்றும் அண்டை வீட்டுக்காரர் பாவேஷ் ஆகியோருடன் மீண்டும் வந்து மேலாளருடன் சம்பள பாக்கி குறித்து கேட்டார்.

    இந்த சச்சரவில் தீர்வு ஏற்படாததால், மேலாளர் பரிக்ஷித், ரனிபாவுக்கு தகவல் அளித்தார். ரனிபா தன் சகோதரர் ஓம் படேல் மற்றும் சிலருடன் அலுவலகத்திற்கு வந்து, மேலாளர் பரிக்ஷித்துடன் நிலேஷை அலுவலக மேல் தளத்திற்கு அழைத்து சென்றார். அங்கு வாக்குவாதம் மோதலாக மாறியது.

    அப்போது அவர்கள் அனைவரும் நிலேஷை பெல்டால் அடித்து, காலால் உதைத்து, முகத்தில் குத்தி பயங்கரமாக தாக்கினர். ஆத்திரத்திலிருந்த ரனிபா, நிலேஷ் வாயில் தன் காலணியை அழுத்தி சம்பளம் கேட்டதற்காக மன்னிப்பு கேட்க சொல்லி கடுமையாக தாக்கினார். அத்துடன் நிற்காமல், அப்பகுதியில் மீண்டும் நிலேஷை கண்டால் கொன்று விட போவதாகவும் மிரட்டினார்.

    அவமானத்துடனும், காயங்களுடனும் கீழே வந்த நிலேஷ் தன்னுடன் வந்தவர்களிடம் இதை தெரிவித்ததை அடுத்து அவர்கள் நிலேஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அவர்கள் அனைவரும் மோர்பி நகர காவல்நிலையத்தில் இது குறித்து புகாரளித்தனர்.

    பட்டியலின பிரிவை சேர்ந்த நிலேஷின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்காக ரனிபா, அவர் சகோதரர் ஓம் படெல் மற்றும் மேலாளர் பரிக்ஷித் ஆகியோர் மீது சம்பந்தபட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்போது வரை கைது நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×