search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சப் கலெக்டர் விசாரணை"

    • பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.
    • 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் விசாரணை நடத்தி வருகிறார்.

    அவர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று அவர்களது பற்களை பிடுங்கி கொடூர செயலில் ஈடுபடுவதாக சமீபத்தில் சிலர் புகார் கூறினர். அவர் பற்களை பிடுங்கி காயம் ஏற்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது.

    மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்காக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலமை விசாரணை அதிகாரியாக அவர் நியமித்துள்ளார். சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல் உண்மை தன்மையை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலும் இந்த விசாரணை நடைபெறும் எனவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டிருந்தது. இதற்காக 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி சிலர் விளக்கங்களை கேட்டனர். இந்நிலையில் நீதி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுவரையிலும் அம்பை சரகத்திற்கு உட்பட்ட அம்பை, கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், பாப்பாக்குடி, அம்பை மகளிர் போலீஸ் உள்ளிட்ட 5 போலீஸ் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட சுமார் 30 பேர் வரை தங்களது பற்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தனது விசாரணையை இன்று முதல் தொடங்க உள்ளார். முதல்கட்டமாக அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துகிறார்.

    அதன்பின்னர் போலீசாரிடம் விசாரணை நடத்திவிட்டு, உதவி போலீஸ் சூப்பிரண்டிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×