search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கில்லி பம்பரம் கோலி"

    மனோஹரன் இயக்கத்தில் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ், தீப்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கில்லி பம்பரம் கோலி’ படத்தின் விமர்சனம். #GilliBambaramGoli #GilliBambaramGoliReview
    வெவ்வேறு கிராமத்தில் இருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர், கில்லி, பம்பரம், கோலி விளையாடுவதில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். குடும்ப கஷ்டம் காரணமாக இவர்கள் மலேசியாவிற்கு வேலைக்காக செல்கிறார்கள். இதேபோல், நாயகி தீப்தி ஷெட்டியும் குடும்ப கஷ்டம் காரணமாக மலேசியாவிற்கு செல்கிறார். 

    மூன்று பேரும் டூரிஸ்ட் கைடு, சூப்பர் மார்க்கெட், ஓட்டல் ஆகிய வேலைகளை செய்து வருகிறார்கள். அதே ஓட்டலில் கஞ்சா கருப்பு வேலை செய்து வருகிறார். மேலும் அங்கு நாயகியும் வேலைக்கு சேருகிறார்.

    ஒரு கட்டத்தில் இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகுகிறார்கள். அதே ஊரில் அடியாட்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்து தாதாவாக இருக்கும் சந்தோஷ் குமாருக்கும் நண்பர்களில் ஒருவரான டூரிஸ்ட் கைடு வேலை செய்பவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் நண்பர்கள் நான்கு பேரும் சிக்கிக் கொள்கிறார்கள். 



    மேலும் நாயகி தீப்தியை அடைய நினைக்கிறார் சந்தோஷ் குமார். இந்த பிரச்சனை காரணமாக நண்பர்கள் நான்கு பேருக்கும் வேலை பறிபோகிறது. பின்னர் தலைவாசல் விஜய்யிடம் வேலைக்கு சேருகிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகனை ஒன்று கூடி எதிர்க்கிறார்கள். 

    நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோரின் திறமைகளான கில்லி, பம்பரம், கோலி விளையாடி வென்றால்தான் அவர்களை கொலை செய்யும் சூழ்நிலை தாதா சந்தோஷ் குமாருக்கு வருகிறது. இறுதியில் சந்தோஷ் குமார் விளையாடி வென்றாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகர்களாக நடித்திருக்கும் நரேஷ், பிரசாத் கார்த்திக், தமிழ் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் தீப்தி ஷெட்டி, வில்லனுக்கு பயப்படுவதும், பின்னர் அவருக்கு சவால் விடுவதும் என தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். முதலில் வில்லத்தனத்தில் மிரட்டும் சந்தோஷ்குமார், இறுதியில் காமெடியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



    ஓட்டலில் வேலை செய்பவராக வரும் கஞ்சா கருப்பு, கார் கேரேஜ் நடத்தும் தலைவாசல் விஜய் ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் மனோஹரன். டெக்னாலஜி வளர்ச்சியால் தற்போதுள்ள இளைஞர்கள் மொபைல் போனில் கேம் விளையாடி நேரத்தை கழித்து வருகிறார்கள். இதனால் நண்பர்களோடு இணைந்து விளையாடும் பழைய விளையாட்டுகளை மறந்துவிட்டோம். களத்தில் இறங்கி விளையாடுவதே சிறந்தது என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே சில காட்சிகளில் தோய்வு ஏற்பட்டாலும் படம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். நாக கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மேலும் மலேசியாவை அழகாக படம்பிடித்திருக்கிறார்.

    மொத்தத்தில் ‘கில்லி பம்பரம் கோலி’ சிறந்த விளையாட்டு.
    ×