search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏழை கைதிகள் ஜாமீன்"

    சிறு குற்றங்களை செய்து கைதாகி இருக்கும் ஏழை கைதிகளுக்கு அரசே பணத்தை செலுத்தி ஜாமீனில் வெளியில் விட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 1401 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 3 லட்சத்து 61 ஆயிரத்து 781 கைதிகளை அடைப்பதற்கான வசதிகள் உள்ளன. ஆனால், 4 லட்சத்து 19 ஆயிரத்து 623 கைதிகள் ஜெயிலில் உள்ளனர்.

    அதாவது ஜெயிலில் 150 சதவீதம் அளவுக்கு கைதிகள் இருக்கிறார்கள். இதனால், அனைத்து ஜெயில்களுமே நிரம்பி வழிகின்றன. நாடு முழுவதும் 134 மத்திய ஜெயில்கள் உள்ளன. அங்கு 1 லட்சத்து 59 ஆயிரத்து 158 கைதிகளை அடைக்க வசதி உள்ளது. ஆனால், அங்கு 1 லட்சத்து 85 ஆயிரத்து 182 பேர் உள்ளனர்.

    329 மாவட்ட ஜெயில்கள் உள்ளன. அவற்றில் 1 லட்சத்து 37 ஆயிரத்து 972 கைதிகளை அடைக்கலாம். ஆனால், 1 லட்சத்து 80 ஆயிரத்து 893 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற நிலைதான் மற்ற ஜெயில்களிலும் உள்ளது.

    ஜெயிலில் கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஜெயிலில் ஏன் இவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்த போது, சிறிய குற்றங்களில் ஈடுபடும் ஏழை விசாரணை கைதிகள் பலர் குறைந்த அளவிலான ஜாமீன் பணத்தை கூட கட்ட முடியாமல் ஜெயிலில் இருப்பது தெரிய வந்தது.

    அவர்கள் செய்த குற்றத்துக்கு மிகச்சிறிய தண்டனையே கிடைக்கும். அவர்களை ஜாமீனில் விடுவதற்கு விதிகள் உள்ளன. ஆனால், அந்த பணத்தை கட்ட அவர்களிடம் வசதி இல்லாததால் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இது போன்ற கைதிகளுக்கு அரசே பணத்தை செலுத்தி ஜாமீனில் வெளியில் விட திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. மத்திய- மாநில அரசுகள் இணைந்து இதற்கான நிதியை உருவாக்கவும் திட்டம் வகுத்துள்ளனர்.

    இதற்கு மத்திய அரசு ஜாமீன் நிதி என்ற பெயரில் பணத்தை தனியாக ஒதுக்கீடு செய்ய உள்ளது.

    இதன்படி ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை ஜாமீன் செலுத்த வேண்டிய நபர்களுக்கு அரசே பணத்தை செலுத்தி ஜாமீனில் வெளியே விட்டு விடும்.

    குறிப்பாக பெண் கைதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வெளியே அனுப்ப ஏற்பாடுகள் செய்ய உள்ளனர். சாதாரண வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அவர்கள் 2 ஆண்டு ஏற்கனவே ஜெயிலில் இருந்திருந்தால் அவர்களுக்கும் ஜாமீன் தொகையை செலுத்தி வெளியே அனுப்புவதற்கு முன்னுரிமை கொடுக்க உள்ளனர்.

    இதன் மூலம் ஏராளமான கைதிகள் ஜெயிலில் இருந்து வெளியே வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயிலில் கூட்டம் குறையும். மேலும் கைதிகளுக்காக அரசு செலவிடும் நிதியும் குறையும்.

    அரசு கைதிகளுக்காக ஜாமீன் பணம் செலுத்தினாலும் அரசுக்கு இது லாபமாகவே இருக்கும்.

    ஏனென்றால், ஒவ்வொரு கைதிகளுக்கும் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்கிறது. அவர்கள் ஜாமீனில் வெளியே சென்று விட்டால் அந்த ஒதுக்கீடு தேவையில்லை. எனவே, இது ஒரு வகையில் அரசுக்கு லாபமாக அமைகிறது. #tamilnews

    ×