search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள் சீரமைப்பு"

    • முடிச்சூர் ஏரி 198 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. 20.55 மில்லியன் கனஅடியை சேமிக்கலாம்.
    • பெரும்பாக்கம் ஏரி 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தாம்பரம் தாலுகாவில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும்.

    சென்னை:

    சென்னை நகரில் உள்ள 9 ஏரிகளை ரூ.100 கோடியில் சீரமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது.

    அயனம்பாக்கம், ஆதம்பாக்கம், செம்பாக்கம், முடிச்சூர், ரெட்டேரி, புழல், வேளச்சேரி, மாடம்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய 9 ஏரிகள் சீரமைக்கப்படுகிறது.

    இந்த ஏரிகள் நகரின் நீரியல் சமநிலையை பராமரிப்பதிலும் மற்றும் வெள்ளப்பாதிப்புகளை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த 9 ஏரிகளும் ரூ.100 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஏரிகளின் பாதுகாப்பு, புத்துயிர் அளித்தல், பொது வசதிக்காக மேம்படுத்துதல் ஆகியவை தேவை என்ற ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஏரிகளை சீரமைக்கிறது. சட்டசபையில் வீட்டு வசதித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு பிறகு ஏரிகளை மேம்பாடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    நீர்வளத்துறை மற்றும் பிற உள்ளாட்சி அமைப்பு களுடன் ஆலோசனை நடத்தி இந்த 9 ஏரிகள் கண்டறியப்பட்டன. இந்த திட்டத்துக்கான உத்தேச ஜி.ஓ.வை அரசுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணியை தொடங்குவதற்கான உத்தரவுக்காக சி.எம்.டி.ஏ. காத்திருக்கிறது.

    ஜி.ஓ. நிறைவேற்றப்பட்டதும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்காக ஒரு ஆலோசகரும் நியமிக்கப்படுவார்.

    அயனம்பாக்கம் ஏரி 85 ஹெக்டருக்கு மேல் பரப்பளவு கொண்டது. 290 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க இயலும். அந்த பகுதியில் நிலத்தடி நீரை கொடுப்பதில் இந்த ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஆதம்பாக்கம் ஏரி 14 ஹெக்டருக்கு மேல் கொண்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு உபரி நீரை வெளியேற்றும் நீர்நிலைகளில் இதுவும் ஒன்றாகும்.

    செம்பாக்கம் ஏரி 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவை கொண்டது. ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இந்த ஏரியில் இருக்கிறது.

    முடிச்சூர் ஏரி 198 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது. 20.55 மில்லியன் கனஅடியை சேமிக்கலாம். இந்த ஏரியும் ஆக்கிரமிப்பு உள்ளாகி இருக்கிறது.

    ரெட்டை ஏரியை பொதுப்பணித்துறை பராமரிக்கிறது. வறட்சியாக இருந்த காலத்திலும், இந்த ஏரி தாகத்தை தணித்து இருக்கிறது. புழல் ஏரி சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாகும்.

    வேளச்சேரி ஏரி ஆரம்பத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. தற்போது தண்ணீர் பரப்பளவு 80.5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மாடம்பாக்கம் ஏரி மழை காலத்தில் மட்டும் நிரம்பக்கூடியது.

    பெரும்பாக்கம் ஏரி 450 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தாம்பரம் தாலுகாவில் உள்ள மிகப்பெரிய ஏரியாகும்.

    ×