search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏட்டு கைது"

    • மோனா தடுப்பூசி செலுத்தியதற்கான போலி சான்றிதழையும் உருவாக்கி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார்.
    • ராணா, மோனா பேசுவது போலவே எடிட் செய்யப்பட்ட ஆடியோவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் மோனா.

    பி.எட். படித்து முடித்துள்ள இவர் அரசு அதிகாரியாக மாற விரும்பி போட்டி தேர்வுகளில் பங்கேற்று வந்தார்.

    கடந்த 2014-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த அவர் டெல்லிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தப்பட்டார்.

    இதற்கிடையே அவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு உத்தரபிரதேசத்தில் பணி கிடைத்தது. அந்த பணியை விரும்பாத அவர் டெல்லியிலேயே தங்கி யு.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மோனா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது எந்த பதிலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மோனா, அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், இன்னும் 15 நாட்களில் வீட்டுக்கு திரும்புவார் எனவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மோனா குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    மோனாவுடன் டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வேலை பார்த்து வந்த சுரேந்திர ராணா (வயது42) என்ற போலீஸ் ஏட்டு மோனாவை காதலித்து வந்ததும், இதை அறிந்த மோனா காதலுக்கு மறுப்பு தெரிவித்ததோடு ராணாவை எச்சரித்ததும் தெரியவந்தது.

    இந்த ஆத்திரத்தில் சுரேந்திர ராணா, மோனாவை கொலை செய்ய முடிவு செய்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் மோனாவின் உடலை புதைக்க அவரது உறவினர்களான ரவின் (26), ராஜ்பால் (33) ஆகியோர் உதவி செய்துள்ளனர். மேலும் இந்த கொலையை மறைப்பதற்காக மோனா உயிருடன் இருப்பது போன்று நாடகமாடி உள்ளனர்.

    அதாவது சுரேந்திர ராணா, மோனாவின் குடும்பத்தினருடன் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது மோனா அரவிந்த் என்பவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வேறு மாநிலத்திற்கு தப்பி சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

    அதோடு மோனா தடுப்பூசி செலுத்தியதற்கான போலி சான்றிதழையும் உருவாக்கி அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு மோனாவின் செல்போன் சிம்கார்டை அவரது உறவினரிடம் வழங்கி மோனாவின் காதலன் அரவிந்த் போல பேச செய்து உள்ளார். அவரும் மோனாவின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு குர்கானில் உள்ளோம். மோனா உங்களிடம் பேச பயப்படுகிறார். நாங்கள் இன்னும் சில தினங்களில் வீட்டுக்கு வருவோம் என கூறியுள்ளார்.

    இதை மோனா குடும்பத்தினர் நம்பி உள்ளனர். ஆனால் பல நாட்களாகியும் மோனா வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அப்போது அவரது செல்போன் எண் அரியானா டேராடூன், ரிஷிகேஷ் என பல இடங்களை காட்டியது. அங்கு சென்று விசாரித்த போது மோனாவின் பெயரில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது.

    இதற்கிடையே ராணா, மோனா பேசுவது போலவே எடிட் செய்யப்பட்ட ஆடியோவை அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வந்துள்ளார். அவற்றை போலீசார் ஆய்வு செய்த போது அந்த ஆடியோவும் போலியானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் சுரேந்திர ராணா மற்றும் அவரது உறவினர்கள் ராஜ்பால், ரவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ராணா தனது காதலை ஏற்க மறுத்த பெண் போலீசை கொலை செய்ததோடு அவர் உயிரோடு இருப்பதாக 2 ஆண்டுகளாக அவரது குடும்பத்தினரை நம்ப வைத்து நாடகமாடியது அம்பலமாகி உள்ளது.

    ×