search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் ஆதரவு"

    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டம் நீடிக்கும் நிலையில், அவருக்கு 22 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தாபானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசிலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்.



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 3-வது நாளாக நீடிக்கிறது. தர்ணா போராட்ட மேடையில் அவருடன் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏராளமானோர் அமர்ந்து இருந்தனர்.

    மேடையில் இருந்தபடியே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் மம்தா பானர்ஜி, நியாயம் கிடைக்கும் வரை சமரசத்துக்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ளார். வருகிற 8-ந்தேதி வரை தர்ணா போராட்டத்தை தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நடத்தும் தனது போராட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று அவருக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டுள்ளன.

    மொத்தம் 22 எதிர்க்கட்சிகள் மம்தாபானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த கட்சிகள் அனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன.

    மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவே பா.ஜனதா தலைவர்கள் சி.பி.ஐ. விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதை பா.ஜனதா மறுத்துள்ளது.

    மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இது பற்றி கூறுகையில், “மேற்கு வங்காளத்தில் அரசியலமைப்பு சட்டத்தை மம்தாபானர்ஜி தொடர்ந்து மீறி வருகிறார். சி.பி.ஐ. அதிகாரிகளை விசாரணை நடத்தவிடாமல் பிணைக்கைதி போல் பிடித்து வைத்திருந்தார். அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரும் எண்ணம் மத்திய அரசுக்கு துளி அளவு கூட கிடையாது” என்றார். #MamataDharna #CBIvsMamata
    ×