search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறவினர்கள் ஏமாற்றம்"

    கும்பகோணம் அருகே 10-ம் வகுப்பு மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்த நாககுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 15 வயது ஆன 10-ம் வகுப்பு மாணவி தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணம் செய்ய அவர்களது உறவினர்களால் பேசி நிச்சயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவருக்கும் இன்று (20-ந்தேதி) சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    திருமணத்தையொட்டி இருவீட்டாரும் உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை விநியோகித்து வந்தனர்.

    இதற்கிடையே மணமகள் தேவிக்கு 15 வயது ஆகிறது என்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவி என்றும் சுவாமிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. மேலும் மாணவி திருமணத்தை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரகசியமாக சிலர் போலீசுக்கு தெரியபடுத்தினர்.

    மாணவியின் திருமணத்தை தடுத்த நிறுத்த போலீசார் முடிவு செய்தனர். அதன் படி இன்று அதிகாலை 4 மணியளவில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையில் போலீசார் திருமண மண்டபத்திற்கு சென்றனர். மண்டபத்தில் இருவீட்டார் உறவினர்களும் திரண்டு இருந்தனர்.

    அப்போது மணமக்களின் பெற்றோரை அழைத்து இன்ஸ்பெக்டர் ரேகாராணி பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவிக்கு சட்டபடி திருமண வயதை எட்டவில்லை. திருமணம் செய்து வைத்தால் சட்டபடி குற்றம். எனவே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூறினார். இதை ஏற்று இரு வீட்டாரும் திருமணத்தை நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

    திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதால் வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர். அவர்கள் மணமக்களை வாழ்த்த முடியவில்லை என ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×