search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேச தேர்தல்"

    பிரச்சாரத்திற்காக ரூ.8000 கோடி மதிப்புள்ள விமானத்தில் பறக்கும் பிரதமருக்கு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று பிரியங்கா காந்தி பேசினார்.
    மகோபா:

    உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்கான முயற்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    அவ்வகையில், பண்டல்கண்ட் மாவட்டம் மகோபாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், விவசாயிகளுக்கு பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என்றும், பிரச்சாரத்திற்காக ரூ.8000 கோடி மதிப்புள்ள விமானத்தில் பறக்கும் பிரதமருக்கு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள்

    மேலும், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வதுடன், பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிரதமர் மோடியும் தவறான விளம்பரம் செய்வதாகவும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டினார்.

    கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சியின்போது செய்த பல்வேறு பணிகளை மேற்கோள் காட்டிய பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக்கூடிய கட்சி. கட்சியின் நோக்கம் நேர்மையானது என்றும் தெரிவித்தார்.  

    ‘பாஜக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. சமாஜ்வாடி கட்சி கொள்ளையடித்தது, பகுஜன் சமாஜ் கட்சி எதுவும் செய்யவில்லை. அவர்களின் நோக்கம் தெளிவாக இல்லை’ என்றும் பிரியங்கா காந்தி விமர்சித்தார்.
    ×