search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடிட்டர் வீடு"

    சென்னை ஆடிட்டர் வீட்டில் திருமணத்தை தடுத்து நிறுத்த மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது தொடர்பாக மணமகளின் அக்காள் கணவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    திருவல்லிக்கேணி எல்லிஸ் சாலையில் வசிப்பவர் ஆடிட்டர் அப்துல்காதர். 28 வயதாகும் இவர் தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கும், தாசின் பாத்திமா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. நாளை மாலை 6 மணியளவில் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் எல்லிஸ் சாலையில் உள்ள மணமகன் அப்துல் காதர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்து. பாட்டிலில் மண்எண்ணெய் நிரப்பி அதில் தீவைத்து வீசினார்கள். இது வீட்டின் முன்பகுதியில் விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    வீட்டின் முன்பு போடப்பட்டு இருந்த ஸ்கிரீன் துணியில் தீப்பிடித்து எரிந்தது. உடனே சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடிவந்து பார்த்தனர். அங்கு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தார்கள்.

    ஆட்கள் வெளியே வருவதைப் பார்த்ததும் மண்எண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டின் முன்பு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் அவரது உருவம் பதிவாகி இருந்தது. அதை போட்டுப் பார்த்ததில் அது முதாசீர் என தெரிய வந்தது.

    இதுபற்றி அப்துல்காதர் போலீசில் புகார் செய்தார். அண்ணாசாலை போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். போலீஸ் விசாரணையில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக முதாசீர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இவர் மணப்பெண் தாசின் பாத்திமாவின் அக்காள் கணவர் ஆவார்.

    இதுபற்றி ஆடிட்டர் அப்துல்காதர் கூறும்போது, “நான் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும் தாசின் பாத்திமாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது.

    இந்த திருமணத்துக்கு தாசின் பாத்திமாவின் அக்காள் பிர்தோஸ் பாத்திமாவும், அவரது கணவர் முதாசீர் என்பவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள்தான் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதிகாலையில் முதாசீர் என் வீட்டின் முன்பு இருந்து தப்பிச் செல்வதை பார்த்தேன். திட்டமிட்டபடி என் திருமணம் நடைபெறும்” என்றார்.

    இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×