search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's History Month"

    • இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மார்ச்-8 பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி.

    வருகிற 8-ந் தேதி, இந்தியா உள்பட உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் பிறந்ததோ, போராட்டத்தில். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி, உழைக்கும் பெண்கள் 15 ஆயிரம் பேர் திரண்டு ஒரு மாபெரும் பேரணியை நடத்தினர். வேலை நேரத்தை குறைக்கவும், கூலியை உயர்த்தவும் வலியுறுத்தியும், வாக்களிக்கும் உரிமை கோரியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.

    இந்த நாளை தேசிய பெண்கள் தினமாக 1909-ம் ஆண்டு அறிவித்தது அமெரிக்க சோசலிஸ்ட் கட்சி. இத்தினத்தை சர்வதேச மகளிர் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின் என்ற அம்மையார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை தெரிவித்தார் அவர். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

     அதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 2011-ம் ஆண்டு நூறாவது சர்வ தேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் 1975-ம் ஆண்டில்தான் ஐக்கிய நாடுகள் சபை. மார்ச் 8-ந் தேதியை சர்வதேச மகளிர் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.

    அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்து வருகிறது ஐ.நா. சமூகம், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த நாள், பெண்கள் சாதிக்க வேண்டிய, எதிர்கொள்ள வேண்டிய சவால்களை நினைவுபடுத்தும் நாளாகவும் அமைந்திருக்கிறது.

    சர்வதேச பெண்கள் தினம் ரஷியா உள்ளிட்ட பல நாடுகளில் தேசிய விடுமுறை நாளாக உள்ளது. இந்த நாடுகளில் பெண்கள் தினத்தை யொட்டி சில நாட்களுக்கு பூக்கள் விற்பனை இருமடங்காக களை கட்டுகிறது. சீனாவில் பல இடங்களில் மார்ச் 8 அன்று பெண் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

     இத்தாலியில் பெண்கள் தினத்தில் மிமோசா பூக்களை வழங்கும் வழக்கம் உள்ளது. அமெரிக்காவில் மார்ச் மாதம் பெண்கள் வரலாற்று மாதமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்கப் பெண்களின் சாதனையை கவுரவப்படுத்தி ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் இந்த மாதத்தில் ஒரு பிரகடனத்தை வெளியிடுகிறார்.

    சமூகத்தின் சரிபாதியாய் உள்ள பெண்கள்தான், ஆண்களுடன் இந்த உலகத்தை நகர்த்தும் இரு சக்கரங்களில் ஒன்றாக உள்ளனர். அவர்களைப் போற்றும் பெண்கள் தினம் பெருமைக்குரியதே.

    ×