search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wife Recovery"

    மனைவியை மீட்டு தரக்கோரி கவர்னர் மாளிகை முன்பு தாயுடன் கணவர் போராட்டம் ஈடுபட்டார். தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த மீனாட்சி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே செந்தில்குமரனின் தாய் சத்யா பெயரில் உள்ள வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு மீனாட்சி, செந்தில் குமரனிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் செந்தில்குமரன் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மீனாட்சியின் பெற்றோர் காரில் வந்து மீனாட்சி மற்றும் அவரது குழந்தையை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து செந்தில் குமரன் தனது மனைவி மற்றும் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை செந்தில்குமரன், தனது தாய் சத்யாவுடன் கவர்னர் மாளிகை வாயில் முன்பு அமர்ந்து குழந்தையை மீட்டு தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தர்ணா போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து செந்தில்குமரன் மற்றும் அவரது தாயை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் செந்தில்குமரனும், அவரது தாய் சத்யாவும் தொடர்ந்து பாரதி பூங்காவில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    ×