search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Grants Ceremony"

    • அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை
    • 42 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கி உள்ளோம்.

    வேலூர்:

    வேலூர் கோட்டை மைதானம் விழாவில் நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    வேலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் வழியில் சாலையோரம் மலைகளை போன்று மக்கள் நின்று வரவேற்பு அளித்தார்கள். இதுபோன்ற வரவேற்பை என் வாழ்நாளில் முதன்முறையாக பார்க்கிறேன். முதல்-அமைச்சரான பிறகு மு.க.ஸ்டாலின் வேலூருக்கு முதன் முறையாக இலங்கை தமிழர்களின் கண்ணீரை துடைக்க வந்தார்.

    தற்போது வேலூர் கோட்டை மைதானத்துக்கு வாக்களித்த மக்களின் கண்ணீரை துடைப்பதற்காக வந்துள்ளார். இந்த கோட்டை மைதானம் பல வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்திய சுதந்திர போராட்டத்தில் முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து இந்த கோட்டையில் தேசிய கொடியை 3 நாட்கள் பறக்க விட்ட சம்பவம் இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

    இந்த கோட்டையில் உள்ள ஜெயிலில் தான் திப்புசுல்தானின் பிள்ளைகளை சாகும் வரை அடைத்திருந்தார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பிகள், பல சுதந்திர போராட்ட வீரர்களையும் அடைத்துள்ளனர். தி.மு.க. கட்சிக்கும் கோட்டை மைதானம் பிரபலமானது. முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா இந்த கோட்டைக்கு முன்னால் நின்று மறியல் செய்தார்.

    அதேபோன்று கோட்டை மைதானத்தில் நடந்த கூட்டத்தில் தான் திராவிட நாடு கொள்கையை ஒத்தி வைக்கிறேன் என்ற அறிவிப்பை அண்ணா கூறினார்.

    காட்பாடி தனி தாலுகா

    கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் எவ்வித முன்னேற்றமும் வேலூர் மாவட்டத்தில் இல்லை. பாலாற்றில் இருந்து காட்பாடிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தேன். காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்வதற்கு 40 கிலோ மீட்டர் தூரமாகும். ஒரு மாணவன் அல்லது விவசாயி ஏதாவது சான்றிதழ் பெறுவதற்கு 40 கிலோ மீட்டர் சென்று வர வேண்டியது இருந்தது. இதுகுறித்து மு.கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தேன்.

    அதன்பேரில் காட்பாடி தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. காட்பாடி தொகுதி மக்கள் என்னவெல்லாம் கேட்டார்களோ அதையெல்லாம் மு.கருணாநிதியின் ஆட்சி காலத்தில் கொண்டு வந்து விட்டேன்.

    காட்பாடி, கே.வி.குப்பம் யூனியனில் ஒரே ஒரு மேல்நிலைப்பள்ளி தான் இருந்தது. தற்போது 42 உயர்நிலை பள்ளிகளை உருவாக்கி உள்ளோம். கல்வியியல் கல்லூரி, 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள், விவசாயிகளுக்காக மோர்தாணா அணை தண்ணீரை கால்வாய் மூலம் கொண்டு வந்துள்ளேன்.

    பொன்னை, திருவலம், குடியாத்தம் ரெயில்வேகேட், அம்முண்டி, பள்ளிக்குப்பம், மேல்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டி கொடுத்துள்ளேன். காட்பாடி தொகுதியில் ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தேன்.

    பாலாற்று தண்ணீர் போதவில்லை என்றபோது காவிரி கூட்டுக்குடிநீரை முதல்-அமைச்சராகிய நீங்கள் தான் கொடுத்தீர்கள். சாலை வசதி, பஸ்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே சிறந்த விளையாட்டு மைதானம் காட்பாடியில் தற்போது திறக்கப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தாலும் ஒன்று என் கண் முன்னே நிற்கிறது.

    காட்பாடி தொகுதியில் ஒரு தொழிற்பேட்டை இல்லை. அதனால் படித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே இந்த நல்ல நேரத்தில் காட்பாடி தொகுதியில் ஒரு தொழிற்பேட்டை அமையும் என்று சொல்ல வேண்டும். அதனை வரவேற்க மட்டற்ற மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    ×