search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water Pipe Break"

    • முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்.

    திருப்பத்தூர்:

    காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை, சிவகங்கை, ஆகிய 5 நகராட்சிகளும், முதுகுளத்தூர், மண்டபம், சாயல்குடி, கமுதி, அபிராமம், இளையான்குடி, திருப்பத்தூர், நெற்குப்பை, உள்ளிட்ட 11 பேரூராட்சி களும், 18 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 3,163 கிராமங்களும் பயன்பெற்று வருகின்றன.

    இதற்காக தினமும் திருச்சி அருகே உள்ள முத்தரசநல்லூர் காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து சுமார் 780 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலமாக இந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

    அவ்வப்போது குழாய்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும், முறையான பராமரிப்பு இல்லாததாலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை திருப்பத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை அருகே பதிக்கப்பட்டிருந்த காவிரி கூட்டு குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது.

    இதனால் சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களும், பஸ்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர். குழாய் உடைப்பின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சென்றது. சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் சிறுவர், சிறுமியர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து திருச்சியில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் தண்ணீர் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. கோடைகாலம் என்பதால் அடிக்கடி காவிரி குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்படுவதை சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×