என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veppur student dies"

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது பூலாம்பாடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). விவசாயி. இவரது மகன் சசிபாலன்(14). இவன் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று காலை சசிபாலன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். மாலையில் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று மகனை தேடினர். அங்கும் அவனை காணவில்லை.

    பின்னர் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி அங்கும் சென்று தேடினர். அங்கும் சசிபாலனை காணவில்லை. இதனைத்தொடர்ந்து வேப்பூர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பள்ளியின் அருகே இருக்கும் தரைமட்ட கிணற்றை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அங்கு சசிபாலன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த சசிபாலன் உடலை இரவு 10 மணியளவில் மீட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சசிபாலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைபார்க்க பரிதாபமாக இருந்தது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவன் சசிபாலன் பள்ளி அருகே உள்ள தரைகிணற்றில் இறங்கி கால் கழுவ முயன்ற போது தவறிவிழுந்துள்ளான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளி அருகே உள்ள பகுதிக்கு சென்று தரைக்கிணற்றில் கால் கழுவி வருகின்றனர். பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் தான் மாணவன் சசிபாலன் கால் கழுவ சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான் என்று போலீசாரிடம் கூறினர்.

    மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் சிவராமன் என்பவர் கால் கழுவுவதற்கு தண்ணீர் எடுக்க முயன்றபோது தொட்டியில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×