search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uzhavan Express"

    சென்னை சேத்துப்பட்டு பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த உழவன் எக்ஸ்பிரஸ் மீது, டீசல் என்ஜின் மோதி விபத்துக்குள்ளானது. #DieselEngine #UzhavanExpress
    சென்னை:

    சென்னையில் தென் மாவட்ட ரெயில்களின் பிரதான முனையமாக செயல்படுவது, எழும்பூர் ரெயில் நிலையம். எழும்பூருக்கு வரும் எல்லா ரெயில்களும் பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படியே, தஞ்சையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை வந்த உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்: 16866), பயணிகள் இறங்கி சென்ற நிலையில் அதிகாலை 5 மணியளவில் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணிமனைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுகொண்டிருப்பதால், அந்த மார்க்கத்தில் எதிர்முனையில் வரும் டீசல் ரெயில் என்ஜின் ஒன்று அருகில் உள்ள வழித் தடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது தண்டவாள இணைப்பு பகுதிக்கு (ஜாயிண்ட் பாயிண்டர்) சில அடி தூரத்தில் அந்த டீசல் ரெயில் என்ஜின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.



    குறிப்பிட்ட அந்த இணைப்பு பகுதியை உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கடந்து சென்றுகொண்டிருந்தது. இந்தநிலையில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் கடக்கும் முன்னரே, டீசல் ரெயில் என்ஜினை அதன் டிரைவர் இயக்கிவிட்டார். இதனால் எதிர்பாராதவிதமாக டீசல் ரெயில் என்ஜின், உழவன் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் ரெயிலின் எஸ்-9 பெட்டி சேதமடைந்து, தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது. அதே நேரத்தில் மோதிய டீசல் ரெயில் என்ஜினும் சேதம் அடைந்தது.

    இந்த எதிர்பாராத விபத்து குறித்து உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு ரெயில்வே அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். பின்னர் ரெயில்வே பணியாளர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி ஜாக்கி கருவிகள் மூலம் ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தூக்கி, தண்டவாளத்தில் நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து உழவன் எக்ஸ்பிரஸ் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விபத்துக்கு டீசல் ரெயில் என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே காரணம். உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருவது தெரியாமல் அவர் டீசல் ரெயில் என்ஜினை இயக்கியுள்ளார். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்”, என்றார்.

    எதிர்பாராத இந்த சம்பவத்தால் தென் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்தடைந்தன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கம்பன் உள்ளிட்ட ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்தடைந்தன. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். 
    ×