search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uthav thackarey"

    • நாளைய சிறப்புபேரவை கூட்டத்தை வீடியோபதிவு செய்ய வேண்டும் எனவும் மகாராஷ்டிரா ஆளுநர் உத்தரவு.
    • ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து இன்று மும்பை திரும்புகின்றனர்.

    மராட்டிய மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    இந்தநிலையில் சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கடந்த 20-ந்தேதி சிவசேனா தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரி அவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அணி திரட்டினார்.

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏக்களில் 38 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் அவருடன் உள்ளனர். மொத்தம் 50 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆட்சி கவிழும் நிலை உள்ளது.

    அதிருப்தி குழுவை சமாதானப்படுத்த சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து ஆட்சியை காப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஜூலை 11-ந்தேதி வரை தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாகும். ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்த முதல் சுற்று வெற்றியாகும்.

    இதற்கிடையே மராட்டிய அரசியலில் புதிய திருப்பமாக பா.ஜனதா தலைவர்கள் கவர்னரை நேற்று இரவு 10 மணிக்கு சென்று சந்தித்தனர்.

    மராட்டிய முன்னாள் பா.ஜனதா முதல்-மந்தரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பட்டீல் ஆகியோர் கவர்னர் மாளிகை சென்று கவர்னர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான மராட்டிய அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. கவுகாத்தியில் முகாமிட்டுள்ள சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யுமாறு பட்னாவிசுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் கவர்னரை சந்தித்து உத்தவ் தாக்கரே அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரியதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த நிலையில் மராட்டிய சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்க ரேவுக்கு கவர்னர் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார். நாளை மாலை 5 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மராட்டிய சட்டசபையின் முதன்மை செயலாளர் ராஜேந்திர பகவத்துக்கு கவர்னர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மராட்டிய சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு கூட்டப்பட வேண்டும். முதல்-மந்திரிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே நடைபெற வேண்டும்.

    இது தொடர்பான நடை முறைகள் அனைத்தையும் 5 மணிக்குள் முடிக்க வேண் டும். 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    நாளை நடைபெறும் சிறப்பு கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும். சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் இருந்து இன்று மும்பை திரும்புகிறார்கள்.

    10 எம்.எல்.ஏ.க்கள் இன்று மும்பை திரும்புகிறார்கள். ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை மும்பை செல்கிறார்கள்.

    கவுகாத்தி நட்சத்திர ஓட்டலில் ஒரு வாரமாக முகாமிட்டு இருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று காரில் ஓட்டலைவிட்டு வெளியே வந்து காமக்யா கோவிலுக்கு சென்றனர். அங்கு பிரார்த்தனை செய்தனர்.

    நாளைய சிறப்பு கூட்டத்தின்போது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துணை சபாநாயகரை நீக்கும் தீர்மானத்தை கொண்டு வரலாம்.

    இந்தநிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றுள்ளார். தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது கவர்னர் உத்தரவிட முடியாது என்று சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

    இதற்கிடையே பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே உத்தவ் தாக்கரே பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மராட்டிய சட்டசபையில் தற்போதைய பலம் 287 ஆக இருக்கிறது. இதில் சிவ சேனா-56, தேசியவாத காங் கிரஸ்-54, காங்கிரஸ்-44 உறுப்பினர்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் தேவை. மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு 154 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

    இதில் சிவசேனா எம்.எல்.ஏ.க்களில் 39 பேர் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால் உத்தவ்தாக்க ரேவுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் அவர் பலப்பரீட்சைக்கு முன்பு பதவி விலகலாம்.

    பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரே அரசு கவிழும் பட்சத்தில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன் மராட்டியத்தில் பா.ஜனதா புதிய ஆட்சியை அமைக்கும்.

    ×