search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Triplicane magician murder"

    மாந்திரீகம் பலிக்காததால் மந்திரவாதியை கொன்றதாக கைதான பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கைதான அப்பெண் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி இவர் குறி சொல்லி கொண்டிருந்த போது பர்தா அணிந்த பெண் ஒருவர் ஆசிட்டை அவர் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் முகம் கருகிய சைய்யது பஸ்ருதீன் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அப்பெண் அடிக்கடி குறி கேட்க வரும் ஐஸ்அவுசை சேர்ந்த நபீன் தாஜ் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை தேடினர். அப்போது அவர் கீழ்ப்பாக்கம் அரசு மனநலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசினார்.

    இதையடுத்து அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? அல்லது கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நாடகம் ஆடுகிறாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு மனநல பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் அவருக்கு மனநிலை பாதிக்கப்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் அளித்த சான்றிதழை அடிப்படையாக வைத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    நபீன் தாஜ் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

    எனது கணவர் மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப பிரச்சனைக்காகவும், தொழில் விருத்திக்காகவும் மந்திரவாதி சைய்யது பஸ்ரூதினை அடிக்கடி சந்தித்து வந்தேன். அப்போது பூஜை பொருட்கள் வாங்கி செல்வேன். ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கினார். தொடர்ந்து 13 வாரம் வருமாறு அவர் கூறினார்.

    ஆனாலும் பிரச்சனை தீராததால் அவருடன் சண்டை போட்டேன். அதன் பின் மீண்டும் 13 வாரம் வருமாறு கூறினார். இது போல் கடந்த 2 ஆண்டுகளாக அவரை சந்தித்து வந்தேன். ஆனால் எனது பிரச்சனை எதுவுமே தீரவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தேன்.

    இது தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நான் மந்திரவாதி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தேன். பின்னர் அங்கிருந்து தப்பி உறவினர் வீட்டிற்கு சென்றேன். அப்போது எனக்கு மன உளைச்சல் இருப்பதாக கூறியதால் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபீன் தாஜ் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
    சென்னை திருவல்லிக்கேணியில் ஆசிட் வீசி மந்திரவாதியை கொன்ற பெண் குறித்து அடையாளம் தெரிந்ததால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (63).

    திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இவருக்கு சொந்த கட்டிடம் உள்ளது. இங்கு மாந்திரீக தொழில் செய்து வந்தார். தகடு, தாயத்து தயாரித்து கொடுப்பார். குறியும் சொல்லுவார்.

    நேற்று முன்தினம் இரவு செய்யது பஸ்ருதீன் தனது கட்டிடத்தில் குறி சொல்லிக் கொண்டு இருந்தார். அங்கு ஏராளமான பெண்களும், ஆண்களும் இருந்தனர்.

    அவர் முன்பு அமர்ந்து இருந்தவர்களில் 10 பெண்கள் பர்தா அணிந்திருந்தனர். அதில் ஒரு பெண் திடீரென்று மர்ம பொருளை சையது பஸ்ருதீன் மீது வீசினார். உடனே அவர் உடல் மளமளவென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    இதனால் செய்யது பஸ்ருதீன் “அய்யோ... அம்மா” என்று அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்களும், ஆண்களும் அங்கிருந்து ஓடினார்கள். தீப்பிடிக்கும் மர்ம பொருளை வீசிய பெண்ணும் தப்பி ஓடி விட்டாள். படுகாயம் அடைந்த செய்யது பஸ்ருதீன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீஸ் உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இரவு இந்த சம்பவம் நடக்கும்போது யார்-யார் அங்கு இருந்தனர் என்று தகவல் சேகரித்தனர்.

    பர்தா அணிந்து வந்த 10 பெண்கள் யார் என்பதையும் தீவிர விசாரணையில் கண்டுபிடித்தனர். இதில் 7 பெண்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.

    மீதம் உள்ள 3 பெண்களில் ஒருவர்தான் மந்திரவாதி சையது பஸ்ருதீனை கொலை செய்து இருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தி.நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

    அந்த பெண்ணை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொலைக்கு காரணமான பெண் இன்று மாலை கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
    சென்னை திருவல்லிக்கேணியில் பெண் ஒருவர் மந்திரவாதியை ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் பஸ்ருதீன் (60). திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பெரிய மசூதி எதிரில் உள்ள வளாகத்தில் அலுவலகம் நடத்தி வந்தார். தன்னை சந்திக்க வருவோருக்கு ஓதி தாயத்து கட்டி வந்தார்.

    தொழில் விருத்தி மற்றும் மாணவ-மாணவிகள் நன்றாக படிப்பதற்காகவும் இவர் தகடு தயாரித்து கட்டி வந்தார்.

    உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களும், குடும்ப பிரச்சனையால் தவிப்பவர்களும் தினந்தோறும் அவரை சந்தித்து வந்தனர். அந்த பகுதியில் சையத் பஸ்ருதீன் பிரபலமானவராக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சையத் பஸ்ருதீன் தனது அறையில் தகடு கட்டும் பூஜையில் ஈடுபட்டிருந்தார். கீழே அமர்ந்து இருந்த அவரது முன்னால் சூடம் உள்ளிட்ட பொருட்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த பூஜையில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ‘பர்தா’ அணிந்திருந்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த ‘ஆசிட்’ போன்ற திராவகத்தை சையத் பஸ்ருதீன் மீது திடீரென வீசி தாக்குதலில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து அவரது உடலில் குபீரென தீப்பற்றியது. வலி தாங்க முடியாமல் சையத் பஸ்ருதீன் அலறி துடித்தார்.

    இந்த நேரத்தில் சையத் பஸ்ருதீனின் நண்பர் பழனிவேல் என்பவரும் அங்கிருந்தார். அவர் சையத் பஸ்ருதீனை காப்பாற்ற முயன்றார். இதில் அவருக்கு கைகளில் தீக்காயம் ஏற்பட்டது. தீப்பற்றி எரிந்ததால் பூஜைக்கு வந்த பெண்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடினார்கள்.

    அவர்களோடு சேர்ந்து ஆசிட் வீசிய பெண்ணும் ஓட்டம் பிடித்தார். சையத் பஸ்ருதீனின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தப்பி ஓடிய பெண்ணை விரட்டிச் சென்று பிடித்தார். ஆனால் அந்த பெண்ணோ தனது தலையில் அணிந்திருந்த துணியை மட்டும் கழற்றி எரிந்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதன்பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர். சையத் பஸ்ருதீனை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் சையத் பஸ்ருதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். திருவல்லிக்கேணி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய பெண்ணை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

    சையத் பஸ்ருதீன் மீது வீசப்பட்ட வேதிப்பொருள் ‘ஆசிட்’ போன்று இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அது பாஸ்பரசாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இளம் பெண் மந்திரவாதி மீது வீசிய வேதிப்பொருள் எந்த வகையை சேர்ந்தது என்பது உறுதியாக தெரியவில்லை.

    இதுபற்றி தடயவியல் நிபுணர்கள் மந்திரவாதி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அங்கு சையத் பஸ்ருதீன் உடல் கருகிய இடத்தில் தீயில் எரிந்த மற்ற பொருட்களை சேகரித்து சென்றனர். அதனை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    சோதனை முடிந்த பின்னர்தான் சையத் பஸ்ருதீனை கொலை செய்ய இளம்பெண் பயன்படுத்திய வேதிப்பொருள் என்ன என்பது உறுதியாக தெரிய வரும்.

    சையத் பஸ்ருதீன் தகடு கட்டியது தொடர்பாக அந்த இளம்பெண்ணுடன் பிரச்சனை இருந்து வந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே அவர் சையத் பஸ்ருதீனை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. தப்பி ஓடிய பெண்ணை பிடிக்க திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளியை தீவிரமாக தேடிவருகிறார்கள். #Tamilnews
    ×