search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trial court"

    • டோஷகானா வழக்கில் அவருக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்
    • உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்றது

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (70). இவர் 2018-ல் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

    பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு கடந்த 2022 ஏப்ரலில் பதவி இழந்த இவர் மீது, பதவியில் இருந்த போது அவருக்கு பரிசாக வந்த சுமார் ரூ.5 கோடியே 25 லட்சம் ($635000) மதிப்பிலான பரிசுப் பொருட்களை டோஷகானா எனப்படும் அரசாங்க கருவூலத்திற்கு கணக்கில் காட்டாமல் விற்று விட்டதாக 2022-ம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    டோஷகானா வழக்கு என வழங்கப்படும் இந்த வழக்கில் அவரை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து, அவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் தாக்கல் செய்தது.

    விசாரணை நீதிமன்றம், நீண்ட விசாரணைக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில், இம்ரான் கான் குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் இம்ரான் கான் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடையும் விதித்து, அவருக்கு அபராதத்துடன் கூடிய மூன்று ஆண்டுகால சிறை தண்டனையும் அளித்தது.

    இதனையடுத்து அவர் அட்டாக் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கும், தண்டனைக்கும் எதிராக இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதி ஆமிர் ஃபாருக் மற்றும் தாரிக் மெகமூத் ஜகான்கிரி ஆகியோர் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணை நடைபெற்று வந்தது.

    இன்று இந்த டிவிஷன் பெஞ்ச், இம்ரான் கானுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் நிறுத்தி வைத்துள்ளது. இத்தகவலை அவரது வழக்கறிஞர் நயீம் பஞ்சுதா சமூக வலைதளமான எக்ஸில் (டுவிட்டர்) தெரிவித்தார்.

    இம்ரான் கான் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதாலும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர் உடனடியாக சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவாரா என்பது தெரியவில்லை. அதே போல் வரவிருக்கும் தேர்தல்களில் அவர் போட்டியிட முடியுமா இல்லை அவரது தகுதி நீக்கம் தொடருமா என்பதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அவரது ஆதரவாளர்களும், குடும்பத்தினரும் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

    ×