search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirunallaru"

    • திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது.
    • திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள்.

    1. திருநள்ளாறு தலத்தில் இப்படிதான் வழிபாடு செய்ய வேண்டும் என்று எந்த கட்டுபாடும் கிடையாது. உங்கள் வசதிக்கு ஏற்ப, உங்கள் சக்திக்கு ஏற்ப வழிபடலாம்.

    2. திருநள்ளாறு தலத்தில் கால் வைத்தாலே போதும், ஏழரை சனி, அஷ்டமத்துவ சனி, சனி திசை போன்ற அனைத்து விதமான சனி தோஷங்களும் நிவர்த்தி ஆகிவிடும்.

    3. திருநள்ளாறு தலத்துக்கு தினமும் சராசரியாக 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்கள் வரை வந்து செல்கிறார்கள். சனிக் கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கும்.

    4. திருநள்ளாறு தலத்தில் கையெடுத்து கும்பிட்டு நமஸ்காரம் செய்யக்கூடாது என்று சிலர் புரளி கிளப்பி விட்டுள்ளனர். இதை பக்தர்களும் மூட நம்பிக்கையுடன் கடைபிடிக்கிறார்கள். ஆலயத்துக்குள் வந்துவிட்டாலே ஈசனை வழிபட வேண்டும் என்பது விதியாகும் என்று சிவாச்சாரியார் டி.ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.

    5. சிலர் திருநள்ளாறு தலத்துக்கு வந்து விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதுவும் பக்தர்களிடையே பரவியுள்ள மூட நம்பிக்கை என்று ராஜா சுவாமிநாத குருக்கள் தெரிவித்தார்.

    6. பொதுவாக சிலர் மற்றவர்களை திட்டும்போது "சனியனே" என்று திட்டுவதுண்டு. இப்படி திட்டுவது சனிபகவானை அவமரியாதை செய்வதற்கு சமமாகும். 'சனியனே' என்று சொல்ல சொல்ல அது சனீஸ்வர பகவானை கோபப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    7. ஒவ்வொருவரது வாழ்விலும் 4 தடவை சனீஸ்வர பகவான் வருவார். மங்கு சனி, பொங்கு சனி, தங்கு சனி, மரண சனி என்று அதை சொல்வார்கள். அதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப திருநள்ளாறு சென்று வழிபட்டால் முழுமையான பலன்களை பெறலாம்.

    8. வெளியூர்களில் இருந்து திருநள்ளாறு தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் நேரிடையாக வீட்டுக்குதான் செல்ல வேண்டும். வேறு கோவில்களுக்கு செல்லக்கூடாது என்று விவரம் தெரியாத ஜோதிடர்கள் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு பிறகு மற்ற தலங்களுக்கு தாராளமாக செல்லலாம்.

    9. திருநள்ளாறு தலத்தில் நவக்கிரக ஹோமம் நடத்தினால் நிச்சய வெற்றி உண்டாகும் என்பது ஐதீகம்.

    10. திருநள்ளாறில் வழிபட்டால் நோய்கள் நீங்கும். செல்வம் பெருகும். கல்வி வளரும். திருமண யோகம் உண்டாகும். களத்தர தோஷம் நீங்கும். விவசாயம் செழிக்கும். எண்ணை வியாபாரம் மேம்படும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    11. புதிதாக வீடு, நிலம் வாங்க விரும்புபவர்கள் திருநள்ளாறு தலத்தில் வழிபட்டு விட்டு சென்றால் வெற்றி உண்டாகும். பூமி தொடர்பான வழக்குகளில் திருநள்ளாறு சனிபகவான் வெற்றி தேடித்தருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    12. திருநள்ளாறு தலத்துக்கு செல்பவர்கள் தவறாமல் எள் தீபம் ஏற்றுவது நல்லது. இந்த எள் தீபத்தை ஆலயத்திலேயே தருகிறார்கள். ஒரு நபர் ஒரு தீபம் ஏற்றினால் போதுமானது. சிலர் தங்கள் வயதுக்கு ஏற்ப 30 வயது என்றால் 30 தீபம் ஏற்றுகிறார்கள். அப்படி ஏற்ற வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

    13. திருநள்ளாறு தலமானது 100 சதவீதம் திருப்பதி தலத்துக்கு இணையானது. திருநள்ளாறில் ஈசனும், திருப்பதி வெங்கடாஜலபதியும் கருணை காட்டாமல் எந்த பக்தனும் அந்த தலங்களுக்கு செல்ல இயலாது.

    14. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அதே போன்றுதான் திருநள்ளாறுக்கு சென்றாலும் திருப்பம் வரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்பம் மட்டுமின்றி வாழ்வில் முன்னேற்றத்தையும் தரும் தலமாக திருநள்ளாறு தலம் திகழ்கிறது.

    15. திருநள்ளாறில் தர்ப்பண்ணேஸ்வரருக்கு காலை, மதியம், மாலை மூன்று நேரங்களிலும் அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.

    16. சனீஸ்வர பகவானுக்கு கருநீல வஸ்திரம் சாத்துவது நல்லது. பக்தர்கள் வஸ்திரங்களை உபயமாக எடுத்து கொடுக்கலாம்.

    17. சில பக்தர்கள் திருநள்ளாறுக்கு ஏழரை சனி தோஷம் இருப்பவர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும் என்று தவறான கருத்துடன் இருக்கிறார்கள். இத்தகைய தகவல் பரவி இருப்பதில் உண்மையில்லை. எல்லா பக்தர்களும், எல்லா நாட்களும் திருநள்ளாறு தலத்துக்கு சென்று வழிபடலாம்.

    18. திருநள்ளாறு தலத்தில் வழிபாடு செய்ய சிறப்பு விதிகள் எதையும் கடைபிடிக்க வேண்டியதில்லை. மற்ற ஆலயங்களில் நீங்கள் எப்படி வணங்குகிறீர்களோ அப்படி வழிபட்டாலே போதும்.

    19. திருநள்ளாறு செல்பவர்கள் நளத் தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்பது அவசியமானது. புனித நீராட முடியாதவர்கள் அந்த தீர்த்தத்தை எடுத்து தலையிலாவது தெளித்துக் கொள்ள வேண்டும்.

    20. திருநள்ளாறு நள தீர்த்தத்தில் உள்ள தண்ணீர் வாரத்துக்கு ஒரு தடவை முழுமையாக மாற்றப்படுகிறது.

    21. திருநள்ளாறு தலத்துக்கென தங்க ரதம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் தங்களால் முடிந்த தொகைகளை அன்பளிப்பாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.
    • ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.

    திருநள்ளாறு தர்ப்பண்ணேஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக திகழ்கிறார்.

    பொதுவாக சனீஸ்வர பகவான் உக்கிர நிலையில் இருப்பதாக சொல்வார்கள்.

    ஆனால் திருநள்ளாறு தலத்தில் அவர் மிகவும் சாந்தமான நிலையில் இருக்கிறார்.

    எனவே திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டால் நீங்கள் கேட்டது எல்லாம் கிடைக்கும்.

    இழந்த பதவி தேடி வரும். பதவி உயர்வு தானாக வரும். செல்வங்கள் குவியும். செல்வாக்கு அதிகரிக்கும்.

    குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். புகழ் ஓங்கும்.

    இப்படி சனீஸ்வர பகவான் வேண்டிய வரம்களை எல்லாம் வாரி வழங்கும் கற்பகவிருட்சமாக இருக்கிறார்.

    • வாணி தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது.
    • கங்கா தீர்த்தம் சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது.

    *பிரம்ம தீர்த்தம்: இது பிரம்மாவால் ஏற்பட்டது. இது இறைவனின் ஆலயத்திற்குக் கிழக்கே உள்ளது. மார்கழி மாதம் அதிகாலையில் இதில் நீராடி இறைவனை வழிபட்டு வர காக்கை வலிப்பு, குன்மம் முதலிய நோய்கள் நீங்கும்.

    *வாணி தீர்த்தம்: இத்தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது. சரஸ்வதியால் உண்டாக்கப்பட்டது. இதில் 48 நாட்கள் மூழ்கி இறைவனை வழிபட்டால் கலைகளில் வல்லமை உண்டாகும்.

    *அன்ன தீர்த்தம்: இது அன்னத்தால் உண்டாக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி அகழியாய் ஓம் என்னும் எழுத்துப் போல இத்தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் மூழ்கினால் பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும்.

    *நள தீர்த்தம்: இது நளனால் உண்டாக்கப்பட்டது. இது கோவிலின் வடக்குப் பக்கம் உள்ள குளம் ஆகும். இதில் எண்ணெய்த் தேய்த்துக் குளித்து இறைவனை வழிபட்டால் சனிபகவான் தோஷம் நீங்கும். இதில் நவக்கிரகங்களுக்கும் தனித்தனிக் கிணறுகள் உள்ளன.

    * கங்கா தீர்த்தம்: இது சிவபெருமானின் சூலத்தால் உண்டாக்கப்பட்டது. இதனைக் கண்ணால் கண்டாலே பாவங்கள் தொலையுமாம். இது நள தீர்த்தக் கரை, நள விநாயகர் ஆலயத்துள் உள்ள கிணறு ஆகும். கங்கா கூபம் என்று இதனைக் கூறுவர். நளகூபம் என்றும் கூறுவர். அமாவாசை, பவுர்ணமி நாள்களில் இத்தீர்த்தத்தால் இறைவனுக்குத் திருமுழுக்குச் செய்வர்.

    * அட்டத்திக்குப் பாலகர் தீர்த்தங்கள்: இந்திரன் முதலான அட்டதிக்குப் பாலகர்களும் தங்கள் தங்கள் திக்குகளில் தங்கள் பெயரில் எட்டுத் தீர்த்தங்கள் உண்டாக்கி, தீர்த்தக் கரைகளில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டுள்ளனர். இவை கோவிலைச் சுற்றிலும் எட்டுத் திக்குகளிலும் அமைந்துள்ளன. இவற்றில் தீர்த்தமாடினால் சிவபதம் கிடைக்கும் என்று இதன் மகிமை கூறப்படுகிறது.

    * அகஸ்தியர் தீர்த்தம்: அகஸ்த்தியரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம். கோவிலின் வடக்கில் உள்ளது.

    * அம்ஸ தீர்த்தம்: அனைத்துத் தேவர்களும் ஒன்றுகூடி ஏற்படுத்திய தீர்த்தம் இது.

    • ருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன.
    • பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    திருநள்ளாறு தலத்தில் வழிபடுவதற்கு சில ஐதீகங்கள் உள்ளன. இதுபற்றி ஆலய குருக்கள் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் கூறியதாவது:

    1. முதலில் நளதீர்த்தத்தில் நீராட வேண்டும். புனித நீராடி முடித்ததும், துணிகளை நளதீர்த்தத்தில் எக்காரணம் கொண்டு போடக்கூடாது. தீர்த்தத்துக்கு வெளியில் கரையில்தான் போட வேண்டும்.

    2. நள தீர்த்தத்தில் நீராடி முடித்ததும் விநாயகருக்கு தேங்காய் உடைத்து வழிபட வேண்டும்.

    3. பின்னர் ஆலயத்துக்கு வந்து மூலவரான தர்ப்பாரண்யேஸ்வர சுவாமிகளை வழிபட வேண்டும்.

    4. இதையடுத்து கோவிலை வலம்வந்து வழிபட வேண்டும்.

    5. பிரகாரம் சுற்றி முடிந்ததும், சனீஸ்வர பகவான் சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    6. இறுதியில் அருகில் உள்ள பிரணாம்பிகா அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபட வேண்டும்.

    7. வெளியில் வந்து கொடிமரம் அருகில் விழுந்து வணங்க வேண்டும்.

    8. ஆலயத்தின் வெளி பிரகாரத்தில் திலதீபம் ஏற்ற வேண்டும்.

    9. முடிவில் ஆலயத்தில் சிறிதுநேரம் அமர்ந்து செல்ல வேண்டும்.

    10. இயன்ற தானதர்மங்கள் செய்வது மிகவும் நல்லது.

    ×