search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Elephant Akila"

    திருவானைக்காவல் கோவிலில் சிவனை பூஜித்து முக்தி பெற்றதாக கருதப்படும் யானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
    திருச்சி:

    பஞ்ச பூத சிவ ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக திகழ்வது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில். வரலாற்று, புராதனச் சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்கு கடந்த 6.12.2011-ல் ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் திருவானைக்காவல் கோவிலுக்கு யானை அகிலா வழங்கப்பட்டது. இந்த யானை அகிலா 24.5.2002-ல் அசாம் மாநிலத்தில் பிறந்தது.

    யானை வழிபட்டு முக்தி அடைந்த கோவிலாக திருவானைக்காவல் இருப்பதால் இங்கு யானைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சிவ பூஜைக்காக யானை அகிலா திருமஞ்சனம் எடுத்து வருகிறது. மேலும் பகலில் நடைபெறும் உச்சிக்கால பூஜையின்போது, அம்பாள் வேடம் தரித்த குருக்களுடன் சென்று யானை அகிலா இறைவனை பூஜிக்கும். மேலும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு உற்சவங்களில் யானை அகிலா இறை பணியாற்றி வருகிறது.

    காட்டில் வாழும் யானைகள் அனைத்தும் நாட்டில் மனிதர்களோடு வாழ முடியாது. இதில் ஒரு சில யானைகள் மட்டுமே மனிதர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வாழும் யானைகளில் சில கோவில்களில் தெய்வ தொண்டாற்றி வருவது பெரும் பாக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.

    அந்த வகையில் திருவானைக்காவல் கோவிலில் சிவனை பூஜித்து முக்தி பெற்றதாக கருதப்படும் யானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நேற்று 19 வயது முடிவடைந்து யானை அகிலா தனது 20-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியது.

    இதையொட்டி, யானை அகிலாவிற்கு அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு கஜ பூஜை செய்யப்பட்டது. பின்னர் பழங்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. தனக்கு முன்பாக படையல் இடப்பட்ட தர்பூசணி உள்ளிட்ட பழ வகைகளை அங்கு திரண்டிருந்த பக்தர்கள், குழந்தைகள் முன்னிலையில் தலையை ஆட்டியவாறு யானை உற்சாகமாக சாப்பிட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    யானை அகிலாவுக்கு ஏற்கனவே ஷவர் குளியல் வசதி செய்து தரப்பட் டுள்ளது. கோவிலின் உள்ளே கார்த்திகை கோபுரத்தின் அருகே உள்ள நாச்சியார் தோட்டத்தில் சுமார் ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் 20 அடி நீளம், 20 அடி அகலத்தில், 6 அடி உயரத்திற்கு நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.

    கோவில் புனரமைப்பு பணிகளின் போது கிடைத்த கற்களைக் கொண்டும், கோவில் பணியாளர்களின் உடல் உழைப்பில், பக்தர்கள், நன்கொடையாளர்களின் வழங்கிய சிமெண்டு, மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

    நீச்சல் குளத்திற்கு யானை எளிதில் வரும் வகையில் சாய்தளமும் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவு பெற்று தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள, நீச்சல் குளத்தில் கோவில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டு மகிழ்கிறது.

    மேலும் யானை அகிலாவிற்கு என தனியாக நடை பயிற்சியுடன் கூடிய தரை தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் 4 ஏக்கர் அளவில் பசும் தீவனங்கள் பயிரிடப்பட்டு, யானை மற்றும் பிற கால் நடைகளுக்கும் வழங்கி வருகின்றனர்.

    நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போடும் அகிலா யானையை பலரும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர். ஏற்கனவே ஷவர் குளியலில் குஷியாக இருந்த அகிலா தற்போது இன்னும் கூடுதல் புத்துணர்வுடன் உள்ளது என்கிறார்கள் பாகன்கள்.
    ×