என் மலர்
நீங்கள் தேடியது "சலங்கை ஆட்டம்"
- சலங்கை ஆட்டத்தை கற்று கொள்வதில் ஆர்வ குறைவு ஏற்பட்டு நாளடைவில் இந்த மரபு கலை அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்டது.
- மற்ற ஆட்டங்களுக்கு உள்ளது போல் சலங்கை ஆட்டத்தையும் நாட்டுபுற கலை என அங்கீகாரம் வேண்டி அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.
சென்னிமலை:
பெரும் சலங்கை ஆட்டம் என்பது சிறு தெய்வ வழிபாட்டில் மிக முக்கிய ஆட்டமாக சிறந்து விளங்கி வந்தது. தப்பாட்ட பறை, குண்டு மேளம், பம்பை, உருமி போன்ற தோல் இசை கருவிகள் இசைக்க தாளம் தப்பாமல் காலில் பெரும் சலங்கை கட்டி ஆடும் சலங்கை ஆட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் மிக சிறப்பாக இருந்தது.
ஊருக்கு 10 ஆட்டகாரர்கள் இருப்பார்கள். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் கிராம சிறு தெய்வ பொங்கல் விழாவில் மிக சிறப்பாக தனது ஆட்டத்தை திருவிழாவில் காட்டி பொது மக்களின் பாராட்டை பெறுவர். வருடத்தில் ஒரு முறை மட்டுமே அதுவும் 7 முதல் 10 நாட்கள் வரை தான் வாய்ப்புகள் கிடைப்பதால் இந்த சலங்கை ஆட்டத்தை கற்று கொள்வதில் ஆர்வ குறைவு ஏற்பட்டு நாளடைவில் இந்த மரபு கலை அழிவின் விழிம்புக்கே சென்றுவிட்டது.
கொங்கு நாட்டுபுற மரபு கலை விழா என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வரும் சென்னிமலையை சேர்ந்த கதிர்வேல் கூறியபோது:- பெரும் சலங்கை ஆட்டம் மட்டும் அல்ல ஒயிலாட்டம், கும்மியாட்டம், தேவர் ஆட்டம், காவடி ஆட்டம், கரக ஆட்டம் என அனைத்து ஆட்ட கலைகளும் மக்களை விட்டு விலகி சென்று விட்டது என்னவோ உண்மை தான். இந்த பெரும் சலங்கை ஆட்டம் என்பது முழுக்க முழுக்க கொங்கு வட்டார மரபு சார்ந்த கலையாக தான் மக்கள் பார்கிறார்கள். மற்ற ஆட்டங்களுக்கு உள்ளது போல் சலங்கை ஆட்டத்தையும் நாட்டுபுற கலை என அங்கீகாரம் வேண்டி அரசுக்கு மனு கொடுத்துள்ளோம்.
முதல் முறையாக கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மேடை நிகழ்ச்சியாக நடத்தி பெரும் வரவேற்பை பெற்றது. இது எங்களுக்கு புது தெம்பை கொடுத்து ள்ளது. தற்போது இந்த சலங்கை ஆட்டகுழு சென்னி மலையில் மட்டும் 2 குழுக்கள் இளைஞர்களால் மிகவும் திறன்பட செயல்பட்டு வருகிறது. தற்போது கோவில் விழா மட்டும் அல்ல பொது நிகழ்ச்சி மற்றும் கல்லூரி விழாவில் கூட இந்த சலங்கை ஆட்டம் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது மீண்டும் சலங்கை ஆட்ட கலையை புத்துணர்வு பெற செய்து வருகிறது.
இந்த கொங்கு வட்டாரத்தில் மிக முக்கிய மரபு கலையாக கருதப்படும் பெரும் சலங்கை ஆட்டம் மூத்தோர்களால் இளைய தலைமுறையினருக்கு இந்த ஆட்ட நுணுக்கங்களை சொல்லி கொடுக்காமல் விட்டதும் ஒரு பெரும் சரிவு தான் என்றார்.
தற்போது இந்த சலங்கை ஆட்டம் கிராம புறங்களில் மட்டும் அல்ல நகர்புற மக்களையும் கவர்ந்து வருகிறது. இதனால் இந்த பெரும் சலங்கை ஆட்டம் மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இனி இது கொங்கு வட்டாரத்தில் நல்ல மரபு கலையை வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.
சென்னிமலையில் சலங்கை ஆட்ட குழுவில் சலங்கை ஆட்டம் ஆடி வருபவர்களிடம் சலங்கை ஆட்டம் பற்றி கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- தற்போது சலங்கை ஆட்டம் நன்மதிப்பை பெற்று வருகிறது. சலங்கைகள் (மணிகள்) வாங்க திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் தான் சிறந்தது. இதை வாங்கிய உடன் பயன்படுத்த முடியாது.
இந்த சலங்கைகளை 3 நாட்கள் புது பானையில் இளநீரில் ஊரவைத்து அதை உலர்த்தி அதன் பின்பு பெருந்துறையில் தோல் கொண்டு சரமாக தெய்ந்து காலில் அணிந்து ஆட வேண்டும். சலங்கை எடை ஒரு காலுக்கு 4 கிலோ வரும். நல்ல வலுவுள்ள இளைஞர்கள் மட்டுமே காலில் கட்டி தாளம் தப்பாமல் ஆடி முடியும் என்கின்றனர்.






