search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicidal thoughts"

    • மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது.
    • மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர்.

    தற்கொலைகள் ஒரே ஒரு காரணத்தினால் நிகழ்வது போல தோன்றினாலும், உண்மை அதுவல்ல. ஒவ்வொரு தற்கொலையின் பின்னணியிலும் பல்வேறு உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகள் உண்டு. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலையால் இழந்தால், அவர்களுக்கு அதே எண்ணம் ஏற்படுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு.

    இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்சனைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம். உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

    அம்மாக்களின் மன அழுத்தம் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் இளம் பருவத்தில் பிரச்சினைகளை சந்திக்கும்போது தற்கொலை முயற்சிக்கு செல்கிறார்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிலும் மனச்சோர்வு அதிகம் கொண்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு இது 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இளம்வயதினரின் தற்கொலை முயற்சிக்கு வேறு பல காரணங்கள் இருப்பினும் அந்த சூழ்நிலையை அவர்கள் கடப்பது தாய்மார்களின் எண்ணங்களை சார்ந்தது.

    தற்கொலை எண்ணங்களுக்கு மரபியல் அல்லது பிற காரணிகள் இருப்பினும் குழந்தைகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள தயார்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பெரும்பாலாக இளம் வயதினர் தங்கள் உணர்வுகளை யாரிடமும் சொல்லாமல் தனிமையை உணர்வதால் இளைஞர்களிடம் தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக இருந்து அவர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப வழிநடத்துங்கள்.

    இந்தியாவை பொறுத்தவரை ஒரு நாளில் 36 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் 13 வயது முதல் 20 வயது வரை உள்ள குழந்தைகளின் தற்கொலை எண்ணங்களுக்கு பெற்றோர்களின் மனநிலை காரணமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.

    தற்கொலை எண்ணங்களை எவ்வாறு கண்டறிவது?

    * சில குழந்தைகள் சிறு விஷயத்திற்கு கூட கோபப்படுவது, காரணமே இல்லாமல் கோபமாக இருப்பது, எதற்கெடுத்தாலும் எரிந்து

    விழுவது என்று அவர்கள் காணப்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.

    * முடிவெடுக்க முடியாமல் திணறுவது, குழம்பிப்போவது போன்ற காரணங்களாலும் ஏற்படும்.

    * முன்யோசனையின்றி முடிவுகளை எடுப்பது, ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பே அதன் முடிவை கணித்து வருந்துவது.

    * எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையாக கையாளத்தெரியாது.

    * குழந்தைகளிடம் யாராவது தவறாக நடந்துகொண்டால் அதாவது உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ முறைகேடாக நடந்துகொண்டாலும் அவர்களுக்கு தற்கொலை எண்ணங்கள் அதிகரிக்கிறது.

    * குழந்தைகள் வளரும் சூழ்நிலைகளும் அதாவது குடும்பத்தில் யாராவது தற்கொலை செய்திருந்தால் அதில் இருந்து மீண்டுவரமுடியாமல் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் மற்றும் தாய்-தந்தை கருத்துவேறுபாடு, பிரிதல் போன்றவையும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    * படிப்பில் ஏற்படும் ஏமாற்றம் அல்லது படிப்பு விஷயத்தில் ஆர்வமின்மை. அதனால் ஏற்படும் மன அழுத்தம் இவை எல்லாம் கூட தற்கொலை எண்ணத்துக்கு வழிவகுக்கின்றன.

    இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர் தற்கொலைகளுக்கு கல்வி சார்ந்த தோல்வி பயம், காதல் தோல்வி போன்றவை தான் முதன்மைக் காரணங்களாக உள்ளன. சில சமயங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை கூட காத்திராமல் தற்கொலை செய்து கொள்வது போன்ற மிகவும் வேதனையான செயல்களும் நிகழ்வதுண்டு. தங்கள் வாழ்வில் சந்திக்கும் தோல்விகளையும், ஏமாற்றங்களையும், அவமானங்களையும் எதிர் கொள்ள துணிவில்லாமல் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இவை மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் தற்கொலைப் பிண்ணனி உள்ளவர்களுக்கு மரபணுக்கள் மூலமாகவும் தற்கொலை எண்ணங்கள் தோன்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    மனச்சோர்வினால் தற்கொலை எண்ணம் கொண்டவரிடம் மனம் விட்டு பேசும் வாய்ப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களுடைய மனச் சோர்விற்கானக் காரணிகளையும் கண்டறிய முடியும். மேலும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் தோள் சாய. தோள் தந்து மனச்சோர்விலிருந்து விடுபட உதவி புரிய வேண்டும். இதற்கு அவர்களின் மனக் குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும் செவி சாய்ப்பது மிகவும் அவசியமானது. அன்புடனும், அக்கறையுடனும் நாம் அவர்களின் மனக்குமுறல்களுக்கு செவி சாய்த்தோமேயானால் அவர்களின் மன பாரம் வெகுவாக குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவியாக இருக்கும். மேலும் அது போன்ற சமயங்களில் வாக்கு வாதங்களைத் தவிர்த்து அவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது மிகவும் சிறந்தது.




    ×