search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stores remove"

    ஆதம்பாக்கத்தில் ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினார்கள். இது குறித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    ஆலந்தூர்:

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிலப்பரப்பில் உள்வட்ட சாலை, பறக்கும் ரெயில் வழித்தடம், கட்டிடங்கள் என ஒவ்வொன்றாக ஆக்கிரமித்து தற்போது ஏரி குட்டையாக மாறிவிட்டது. குட்டையாக காட்சியளித்து வரும் ஏரி சரிவர பராமரிக்கப்படாததால் அங்கு உரிய தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் இந்த ஏரிக்கரையோரம் ஆக்கிரமித்து இருந்த வீடுகள் அகற்றப்பட்டது. ஆனால் அங்கு வசித்தவர்களுக்கு முறையாக மாற்றுவீடுகள் வழங்கப்படாததால் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் மீண்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்தன.

    இந்த வீடுகளுக்கு மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 47-க்கும் மேற்பட்ட கடைகள், தொழில் நிறுவனங்கள், கிடங்குகள் ஆக்கிரமித்து விட்டன. இந்த நிலையில் ஆதம்பாக்கம் மேடவாக்கம் மெயின் ரோட்டில் ஏரிக்கு செல்லும் வழியில் ஆக்கிரமித்து உள்ள கடைகளை முதற்கட்டமாக அகற்ற வருவாய் துறையினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து தாம்பரம் ஆர்.டி.ஒ. சந்திரசேகர் தலைமையில் ஆலந்தூர் தாசில்தார் பெனாடின், பொதுப்பணித்துறை அதிகாரி குஜராஜ் தேவராஜ், வருவாய்துறை, பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் அங்கு ஆக்கிரமித்து இருந்த 47 கடைகளை அதிரடியாக அகற்றினார்கள். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முன்னதாக அங்கு வந்த ஆலந்தூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் என்.லட்சுமிபதி, ஆலந்தூர் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் சீராளன் உள்பட சிலர் தாசில்தார் பெனாடினை சந்தித்து ‘இங்கு உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களுக்கு உரிய முறையில் மாற்று இடங்களை வழங்கிட வேண்டும்’ என்றனர்.

    இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த பகுதியில் 100 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் முலமாக மாற்றுவீடுகள் வழங்கப்படும். மாற்று இடம் வழங்கப்பட்டதும் ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்படும்’ என்றனர். #tamilnews
    ×