search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small Unmanned Aircraft"

    சேலம்-சென்னை 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. #GreenWayRoad

    சேலம்:

    சேலம்-சென்னைக்கு 8 வழி விரைவு சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் 277 கி.மீ. தூரத்திற்கு அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் இதற்கான நில அளவீடு கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி நிறைவு பெற்றது. 70 அடி அகலத்தில் 36.3 கி.மீ. தூரம் அமைய உள்ள இந்த சாலைக்கு 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.

    அதிகாரிகள் நில அளவீடு செய்த போது விவசாயிகள் மற்றும் பொது மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து கண்ணீர் விட்டு கதறினர். ஆனாலும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நில அளவீடு பணி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆச்சாங் குட்டப்பட்டி, குப்பனூர், உடையாப்பட்டி எருமாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு நடந்த பகுதிகளில் ஆள் இல்லாத குட்டி விமானம் மூலம் நேற்று வீடியோ எடுக்கப்பட்டது.

     


    இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள் என்று ஆள் இல்லாத குட்டி விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கியவர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் முறையாக பதில் சொல்லாததால் அந்த பகுதி விவசாயிகளும், பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, 8 வழி விரைவு சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் எவ்வளவு தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் மற்றும் மாமரங்கள் உள்ளது என்பது குறித்தும், விவசாய பயிர்கள், தரிசு நிலங்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் வீடியோ எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    இந்த வீடியோ பதிவுகள் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் உயர் அதிகாரிகள் இந்த இடங்களில் எவ்வளவு மரங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தனர்.

    ×