search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small Onion Price Increased"

    சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ அதிகபட்சமாக முதல் தரம் 55 ரூபாய்க்கும், 2-ம் தரம் 50 ரூபாய்க்கும் விற்பனையானது.
    சேலம்:

    சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேட்டூர், மேச்சேரி, வீரபாண்டி, எடப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த வெங்காயத்தை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் வாங்கி செல்வார்கள். கடந்த வாரம் சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் 26 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    இந்தநிலையில் சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் இருந்தே கிடுகிடுவென உயர்ந்தது. இன்று சேலம் மார்க்கெட்களில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ அதிகபட்சமாக முதல் தரம் 55 ரூபாய்க்கும், 2-ம் தரம் 50 ரூபாய்க்கும் விற்பனையானது.

    உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் முதல் தரம் 48 ரூபாய்க்கும், 2-ம் தரம் 45 ரூபாய்க்கும விற்பனையானது. கடந்த வாரம் 18 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயத்தின் விலை இந்த வாரம் 2 ரூபாய் அதிகரித்து 20 ரூபாயாக உயர்ந்தது. இந்த திடீர் விலை உயர்வால் வெங்காயம் வாங்க சென்ற மார்க்கெட்டுக்கு சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதிக அளவில் வாங்க நினைத்தவர்கள் குறைந்த அளவிலே வாங்கி சென்றனர்.

    இதே போல சேலம் மார்க்கெட்களில் தக்காளி பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 16 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி பழம் ஒரு கிலோ இந்த வாரம் மேலும் உயர்ந்து 20 ரூபாய்க்கு விற்பனையானது. இனி வரும் நாட்களில் தக்காளி மற்றும் வெங்காயம் விலை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதே போல கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அதிக அளவில் மழை பெய்தது.

    இந்த மழையால் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் மற்றும் தக்காளி செடிகள் அழுகி சேதம் அடைந்தது. மேலும் தொடர் மழையால் வெங்காய அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய வரத்து மார்க்கெட்களுக்கு குறைந்ததால் அதன் விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. இனி வரும் நாட்களிலும் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது என்றார்.

    கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் விலை இதே நாட்களில் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக கிலோவுக்கு 150 ரூபாய் வரை விற்பனையானது. இந்தாண்டும் தற்போது நாள் ஒன்றுக்கு 5 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து வருவதால் கடந்த ஆண்டை போல வெங்காயம் விலை உயர்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் வியாபாரிகள் மற்றம் பொதுமக்கள் உள்ளனர்.

    ×