என் மலர்
நீங்கள் தேடியது "வாலாஜா சாலை மறியல்"
வாலாஜா அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் வயல்வழியாக மூதாட்டியின் உடலை எடுத்து சென்றனர்.
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த எடையந்தாங்கல் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு மயானத்திற்கு செல்ல பாதை இல்லாததால் விவசாய நிலங்களின் வழியாக உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால் மயானத்திற்கு பாதை அமைத்து தர பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி இறந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், கிராமநிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் மூதாட்டியின் உடலை நெற்பயிர்கள் விளைந்துள்ள விவசாய நிலத்தின் வழியாகவும், ஓடைக்கால்வாய் வழியாக இடுப்பளவு நீரிலும் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.






