என் மலர்
நீங்கள் தேடியது "சோபி மோலினக்ஸ்"
- சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார்.
சிட்னி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பிப்ரவரி 15-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 20 ஓவர் ஆட்டங்கள் சிட்னி (பிப்.15), கான்பெர்ரா (பிப்.19), அடிலெய்டில் (பிப்.21) நடக்கிறது.
இதன் பின்னர் ஒருநாள் (பிப்.24, 27, மார்ச் 1) மற்றும் டெஸ்ட் போட்டி (மார்ச் 6-9) அரங்கேறுகிறது. இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடாத ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்துகிறார். பெர்த்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் 35 வயது அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார்.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர், ஒருநாள், டெஸ்ட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய பெண்கள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் சோபி மோலினக்ஸ் 20 ஓவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக அலிசா ஹீலி தொடருகிறார்.
மார்ச் மாதம் நடக்கும் வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரில் இருந்து அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக சோபி மோலினக்ஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவிக்கான போட்டியில் இருந்த தாலியா மெக்ராத் துணை கேப்டனாக தொடருகிறார். சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னெர் இணை துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பொறுப்பை ஏற்கும் 28 வயது சோபி மோலினக்ஸ் இதுவரை 3 டெஸ்டில் ஆடி 7 விக்கெட்டும், 17 ஒருநாள் போட்டியில் 31 விக்கெட்டும், 38 இருபது ஓவர் போட்டியில் 41 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். முழங்கால் காயம் காரணமாக அவர் 2024-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெறவில்லை. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் அங்கம் வகித்தார்.






